நாகர்கோயில் விசாரணை கைதி மரணம்… போலீஸ் காரணமா?

Published On:

| By Kavi

நாகர்கோயிலில் விசாரணை கைதி உயிரிழந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (35). இவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்பனை செய்ததாக கூறி கடந்த ஜூலை 9ஆம் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

அவரிடமிருந்து 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரி வர்மன் நாகர்கோயில் கிளை சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த சூழலில் இன்று (ஜூலை 13) காலை அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவர் ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சபரிவர்மன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக கூறப்படும் நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் சபரிவர்மன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,

“தவெக ஆட்சியிலும் தொடர்கிறதா “லாக்-அப்” மரணங்கள்? விசாரணை வேண்டும்! கடந்த ஜூலை 9 ஆம் தேதி குட்கா வழக்கில் கைதாகி, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் என்ற விசாரணைக் கைதி, சிறையிலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மாற்றுத் திறனாளியான சபரிவர்மன் சிறையில் அடித்துக் கொல்லப்பட்டதாக, குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் போராடுகின்றனர். கடும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பும் இச்சம்பவத்தின் மீது விஜய் அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும். காரணம், தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்படுபவர்களுக்கு அவ்வப்போது கை, கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்படுவதும், “பாத்ரூமில் வழுக்கி” விழுந்துவிட்டதாக காவல்துறை அதை மழுப்புவதும், “கைதிகள் செல்லும் கழிவறைகள் மட்டும் தான் எப்பொழுதும் வழுக்குமா” என நீதிமன்றங்கள் கண்டிப்பதும் தொடர்கதையாகி வரும் நிலையில், காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை நம்மால் எளிதாகக் கடந்துவிட முடியவில்லை. காரணம், திருப்புவனம் அஜித்குமாரின் லாக்-அப் மரணம் நம்முள் ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது.

அவரைப் போன்றோரு இன்னொரு அப்பாவியை இழக்க தமிழகம் தயாராக இல்லை. எனவே, விசாரணைக் கைதி சபரிவர்மன் மரணத்தின் உண்மைக் காரணம் என்னவென்பதை எவ்வித சமரசமுமின்றி கண்டறிய வேண்டுமெனவும், சிறையில் உள்ள கைதிகளின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share