தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகள் வெட்ட விதித்த தடை நீக்கம்- உச்சநீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Mathi

Supreme Court Stays High Court Order on Cow Slaughter in Tamil Nadu

தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகள் வெட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர், பக்ரீத் பண்டிகை மற்றும் பிற நாட்களில் பொது இடங்களில் மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு, மே 27-ந் தேதி ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. அதில், பக்ரீத் பண்டிகை அல்லது வேறு எந்த நாளிலும் தமிழகத்தில் எங்கும் பசுக்களையும் கன்றுக்குட்டிகளையும் வெட்டக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், ”சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, 1958-ஆம் ஆண்டின் ‘தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு’ (Tamil Nadu Animal Preservation Act, 1958) முரணானது” என்று தமிழக அரசு வாதிட்டது.

ADVERTISEMENT

மேலும், இந்த சட்டத்தின்படி, 10 வயதுக்கு மேற்பட்ட, வேலை செய்யவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ தகுதியற்ற கால்நடைகளை, உரிய அதிகாரியின் சான்றிதழ் பெற்று வெட்டுவதற்கு அனுமதி உண்டு. எனவே, உயர்நீதிமன்றம் விதித்த முழுமையான தடை சட்டத்திற்கு எதிரானது என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, இன்று ஜூலை 13-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

மனுதாரர் பொது இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்கான கோரிக்கையை மட்டுமே முன்வைத்திருந்த நிலையில், உயர்நீதிமன்றம் மாநிலம் முழுவதும் முழுமையான தடையை விதித்தது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்ற தமிழக அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் இறுதிப் பகுதி “திருத்தப்பட வேண்டியது” (required correction) என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share