சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (12.07.2026) இரவு சென்னையில் காலமானார். கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

1947-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர் பூமணி.
கரிசல் மண்ணின் மக்களின் வாழ்வியல் யதார்த்தங்கள், உழைப்பாளர்களின் சிக்கல்கள் மற்றும் சமூக உறவுகளைத் தனது படைப்புகளில் தத்ரூபமாகப் பதிவு செய்தவர்.
‘வெக்கை’, ‘பிறகு’, ‘நைவேத்யம்’, ‘வரப்புகள்’ மற்றும் ‘வாய்க்கால்’ போன்றவை இவரது மிக முக்கியமான நாவல்கள்.
இவரது வரலாற்றுப் பின்னணி கொண்ட புகழ்பெற்ற ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். இது 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் மற்றும் சாதியப் போராட்டங்களை வரலாற்றுப் பின்னணியில் மிக விரிவாகப் பதிவு செய்த நாவல் இது.
தமிழக அரசின் இலக்கியப் பரிசு மற்றும் ‘கதா’ விருது போன்ற பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.
‘கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு குடும்பத்தின் சிதைவையும், அதன் பின்னணியில் உள்ள சமூகக் காரணிகளையும் உணர்வுப்பூர்வமாகப் படம்பிடித்திருந்தது இந்த திரைப்படம்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து தேசிய விருதுகளைப் பெற்ற ‘அசுரன்’ திரைப்படத்தின் அடிப்படை, பூமணியின் ‘வெக்கை’ நாவல்.
இலக்கியம் தவிர, பள்ளிக் கல்வித் துறையிலும் இவர் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவங்கள் இவருடைய படைப்புகளில் உள்ள சமூகப் பார்வையிலும் பிரதிபலிக்கும்.
பூமணியின் உடலுக்கு இன்று (13.07.2026) சொந்த ஊரான கோவில்பட்டியில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

அரசு மரியாதை
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “ சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான திரு. பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
திரு. பூமணி அவர்கள் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.
அவரது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘அசுரன்’ திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.
திரு. பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியத் துறையில் பூமணி அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பூமணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, “பிறகு, வெக்கை உள்ளிட்ட நாவல்களின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் பூமணி மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் துயருற்றேன். கரிசல் காட்டுப் பகுதியில் பிற எழுத்தாளர்கள் பேசாத மக்களைப் பற்றிப் பேசியவர். எதிர்ப்பு இலக்கியத்துக்கான இலக்கணத்தைத் தனது படைப்புகளின் மூலம் உருவாக்கியவர். அவருக்கு என் அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.
சு. வெங்கடேசன் எம்.பி, “பிறகு”, “வெக்கை”, “அஞ்ஞாடி” என்று தமிழின் மிகச்சிறந்த நாவல்களைத் தந்த எழுத்தாளர்.
வதைபடும் மனிதர்களின் மீதான கருணையின் மீதும், அவர்களின் கோபத்தின் மீதும் நின்றே வாழ்வையும் வரலாற்றையும் பார்த்தவர்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற கரிசல்காட்டின் தனித்துவமிக்க எழுத்தாளர் பூமணிக்கு என் இதய அஞ்சலி” என கூறியுள்ளார்.
