வியட்நாம் நாட்டில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழனி பகுதியைச் சேர்ந்த முருகபிரபு மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரும் பழனியில் லாவா மொபைல் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களாகப் பணியாற்றி வந்தனர். இவர்களது சிறந்த வணிகச் செயல்பாடு அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்காக கடந்த புதன்கிழமை அவர்கள் வியட்நாம் சென்றுள்ளனர்.
அங்குள்ள ஃபூ குவொக் தீவுப் பகுதியில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊழியர்கள் 4 பேருடன் இரண்டு படகுகள் மூலம் கடலில் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 10:30 மணியளவில் எதிர்பாராதவிதமாகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 8 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பழனியைச் சேர்ந்த முருகபிரபு கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்ததாக அவருடன் சென்ற நண்பர் தெரிவித்துள்ளார். அதேபோல் திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த அழகு முத்து உள்ளிட்ட 2 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த விபத்து குறித்து வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபூ குவொக் தீவு அருகே இந்தியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் மற்றும் பயணிகளின் நிலவரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவ ஹோ சி மின் நகரில் அவசரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்வதற்காக மத்திய அரசு சார்பில் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹோ சி மின் நகர் கட்டுப்பாட்டு அறையை +84 36 281 7930, +84 91 552 3714, +84 33 452 0414 ஆகிய எண்களிலும், ஹனோய் பகுதி கட்டுப்பாட்டு அறையை +84 91 308 9165 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இரங்கல்
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “வியட்நாமின் ஃபூ குவோக் (Phu Quoc) தீவு அருகே இந்தியர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியத் தூதரகமும், துணைத் தூதரகமும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேலும், நமது அதிகாரிகள் வியட்நாம் நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.
லாவா நிறுவனம் இரங்கல்
லாவா மொபைல் நிறுவனம் தனது எக்ஸ் பதிவில், “வியட்நாமில் இன்று நிகழ்ந்த துயரமான படகு விபத்து குறித்த செய்தி எங்களை ஆழ்ந்த கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் எங்களது வர்த்தகப் பங்காளிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக, வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதே எங்களின் முக்கிய முன்னுரிமையாகும். இந்தியா மற்றும் வியட்நாமில் உள்ள எங்களது குழுக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் அவசரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவல்களை அறிய அல்லது உதவிகளைப் பெற விரும்பும் குடும்பத்தினர் +84 36 281 7930, +84 91 552 37 14 அல்லது +84 33 452 0414 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.
அதிகாரிகளிடமிருந்து வரும் அடுத்தகட்ட தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். புதிய விபரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் அவை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளது.
