பள்ளிக்குள் தவெக நிகழ்ச்சி நேரலை: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

Published On:

| By Kavi

அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி ஒளிபரப்பான விவகாரத்தில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் அரசியல் நிகழ்வுகள் கூடாது, தேவையின்றி பள்ளிகளுக்குள் யாரும் உள்ளே நுழையக் கூடாது என்று நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்தார்.

ADVERTISEMENT

எனினும் நேற்று காலை கரூரில் நடந்த தவெக கட்சி நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியது, கரூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை குவித்தது.

இந்தசூழலில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பிறப்பித்த உத்தரவில்,

”அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.

எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share