கரூரில் இன்று தமிழக முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போது திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக கரூர் வந்த விஜய் பேசுகையில், “தீயசக்தி ஆட்சி முடிந்து பெட்டிக்குள் போனதிலிருந்தே என்னென்னவோ செய்கிறார்கள், ஏதோ பேசுகிறார்கள், ‘சோபா’ என்கிறார்கள், ‘வாஷிங் மெஷின்’ என்கிறார்கள். இந்த அரசியல் வியாபாரம் செய்வதற்கான அந்த வெண்டிங் மெஷினே அவர்கள்தான், யார் இந்த திமுக! இதில் நம்மைப் பார்த்து வாஷிங் மெஷின் என்கிறார்கள். தேர்தலில் ஓட்டுக்குக் காசு கொடுக்கிற அந்த கலாச்சாரத்தை, அந்தப் பண்பாட்டை அடித்து நொறுக்கியிருக்கிறோம். தேர்தலிலேயே அப்படி வேலை பார்த்த நாம், நமக்கு எதற்கு இந்த குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்? மக்கள் என் பக்கம் அப்படி இருக்கும்போது நமக்கு எதற்கு இந்த பேரம் எல்லாம்?
இந்தத் திருட்டு திமுக ஆட்சியை வைத்துக்கொண்டு ஊரடித்து உலையில் போட்டு இந்தக் கொள்ளையை அடித்ததால்தான், உங்கள் கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் ‘ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு… வருகிறான் பார் வேட்டைக்காரன்’ என்று ஓடிக்கொண்டே இருக்கிறார். இன்னொருவர் வெளிநாட்டில் போய் ஒளிந்துகொண்டார். வெளிநாடு உடனே ஸ்டாலின் சார் என்று நினைத்துவிடப் போகிறீர்கள், அவர் இல்லை; எனக்கு எப்போதுமே ஸ்டாலின் சார் மேல் ஒரு தனிப் பாசம் ஒன்று உண்டு, அவர் கிடையாது. இவர் வேறு, சிங்கப்பூருக்குச் செக்கப்புக்கு போனார் அல்லவா அவர். இன்னும் தோண்டத் தோண்ட எத்தனை பேர் மாட்டப் போகிறார்களோ தெரியவில்லை” என திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் எ.வ.வேலு ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பதிவில், “கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காகக் களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்தவுடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆவர்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சைத் தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு…” என விமர்சித்துள்ளார்.
