Video : அரசு பள்ளியில் முதல்வர் விஜய் பேச்சு ஒளிபரப்பு – நெட்டிசன்கள் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரங்களில் சென்னை திரும்பிய முதல்வர் விஜய், அதன் பிறகு முதல் முறையாக மீண்டும் இன்று கரூருக்குச் சென்றார். அங்குள்ள அட்லஸ் கலையரங்க வளாகத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

இந்நிலையில், அவ்விழாவில் பேசிய முதல்வரின் உரையை கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் திரையிட்டுக் காட்டியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

அரசுப் பள்ளியில் முதல்வரின் அரசியல் உரை ஒளிபரப்பப்பட்டுள்ள இச்சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ‘#TVKFiles’ என்ற ஹாஷ்டேக்குடன் இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் அவர்கள், கல்வி நிலையங்களில் திட்டமிட்டு அரசியல் திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

முன்னதாக, உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து முதல்வரின் புகைப்படத்தை மாட்டி, ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தற்போது நேரடியாக வகுப்பறையிலேயே அரசியல் பொதுக்கூட்ட நேரலை ஒளிபரப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இது கல்வித் துறையின் விதிகளுக்கு முற்றிலும் முரண்பாடானது என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றன. சம்பந்தப்பட்ட பள்ளி யாருடைய அனுமதியுடன் இந்த நேரலையை வகுப்பறையில் திரையிட்டது என்பது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சர்ச்சைக்குள்ளான நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று (ஜூலை 9) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

அதில் “கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல… அரசியலின் மேடை அல்ல… அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும்!

இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை. அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அல்லது அரசு சாராத இதர நிகழ்வுகளோ நடத்தக் கூடாது. எந்த அரசியல் கட்சியினரும், எந்தத் தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.

மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது. அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல; கனவுகள் விதைக்கப்படும் நேரம், சிந்தனைகள் செழுமையாக்கப்படும் நேரம், அறிவு பெருகும் நேரம், வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.

எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.

பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின், விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும். புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.

எண்ணங்களைத் துளிர்விட்டு, கனவுகளுக்கு இறக்கை கட்டி, எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்! அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!

அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.

அன்பு மாணவச் செல்வங்களே… நல்லதைப் படியுங்கள்! நன்றாகப் படியுங்கள்!” என அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல… அரசியலின் மேடை அல்ல… என்று அமைச்சர் அறிக்கை வெளியிட்ட மறுநாளே, அமைச்சரும் முதல்வரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் அரசியல் பேச்சு ஒளிபரப்பப்பட்டுள்ள சம்பவம் தற்போது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share