கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து மேடையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதல்வர் விஜய்க்கு ‘வெள்ளி வாள்’ வழங்கி கௌரவித்தார். பின்னர் அவர் பேசுகையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கரூர் மாநகருக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சியின் தலைவராக வந்த நம் தளபதி, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக கால் எடுத்து வைத்திருக்கிறார். அவரை கரூர் மாவட்ட மக்கள் சார்பாகவும், இந்த இயக்கத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கழக நிர்வாகிகள் சார்பாகவும் வரவேற்கிறேன்.
புரட்சித்தலைவர் MGR வழியில் தளபதி விஜய்!
தமிழகத்தில் ஒரு அரசியல் புரட்சியை ஏற்படுத்திய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1972-இல் இயக்கம் தொடங்கியபோது, ‘விசில் அடித்தவர்களை வைத்துக்கொண்டு இவரால் கட்சி நடத்த முடியுமா?’ என்றனர். அதற்குப் பதில் சொல்லும் விதமாக, 1977-இல் அவர் ஆட்சிக்கு வந்தபோது, ‘திரையுலகில் இருந்து வந்தவருக்கு ஆட்சி நடத்தத் தெரியுமா?’ என்றார்கள். ஆனால், அதே புரட்சித்தலைவர் தான் உயிருடன் இருக்கும் வரை மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து சரித்திர சாதனை படைத்தார்; இந்தியாவையே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதேபோல், இப்போது புரட்சித்தலைவரின் அன்பும், மறைந்த முதலமைச்சர் அம்மாவின் வீரமும் ஒன்றுசேர்ந்த தலைவராக நம்முடைய புரட்சித் தளபதி விளங்குகிறார். தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவே இன்று நமது முதலமைச்சரை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. தளபதியைக் காண்பதற்கு மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமே தவம் கிடக்கிறது. இங்கு திரண்டிருக்கும் இளைஞர் பட்டாளம் மட்டுமல்ல, இனி வரக்கூடிய தலைமுறையும் உங்கள் பின்னால் தான் அணிவகுக்கும். எனவே, இனிமேல் என்றுமே தமிழகத்தில் தளபதியின் ஆட்சிதான்.
திமுகவின் மனக்கோட்டை தகர்ந்தது
புரட்சித்தலைவி அம்மாவின் கரத்தை வலுப்படுத்துவதற்காக அதிமுகவில் நாங்கள் எண்ணற்ற தியாகங்களைச் செய்திருக்கிறோம். அவரை கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று சொன்னோம். அதேபோலத்தான் இதே மேடையில் சொல்கிறேன், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் நமது தளபதி தான்!
இயக்கம் ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த வரலாறு படைத்தவர் நமது தலைவர். ‘விடியலைத் தருகிறேன்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தீய சக்தியான திமுகவின் ஆட்சியில், விடியல் கிடைத்தது அவர்களுக்குத் தானே தவிர தமிழக மக்களுக்கு அல்ல.
‘பணம் மட்டும் இருந்தால் போதும், அதிகாரம் இருந்தால் போதும் ஆட்சிக்கு வந்துவிடலாம்’ என்று மனக்கணக்கு போட்டவர்களின் மனக்கோட்டையைத் தகர்த்தவர் நமது தலைவர் விஜய். ஆட்சி அதிகாரத்திற்கும் பணத்திற்கும் இங்கு வேலையில்லை; இந்த இயக்கம் அன்பிற்கு அடிமையான இளைஞர் பட்டாளத்தைக் கொண்டது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். நீங்கள் உத்தரவிடுங்கள்! உங்கள் பின்னால் ஒரு எளிய தொண்டனாக, இந்த இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக இரவு பகல் பாராமல் போராடுவோம். தமிழகத்தின் எதிர்காலம் இனி தளபதியின் கையில் தான் உள்ளது.
சவால்களை முறியடிப்பார் முதல்வர்
தற்போது தளபதி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல சவால்கள் உள்ளன. கடந்த திமுக ஆட்சியில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலவியது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு இன்று சவாலாக உள்ளது; போதைப்பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு சவாலாக உருவெடுத்துள்ளது.
இதுமட்டுமன்றி, தற்போது கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய காவிரி நீர் விவகாரமும் புதிய சவாலாக எழுந்துள்ளது. இங்கிருக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதும் பெரிய சவால்தான். ஆனால், அத்தனை சவால்களையும் தூள் தூளாக்கி, தமிழகத்தில் ஒரு தூய பாதுகாப்பான ஆட்சியை நமது தளபதி வழங்குவார். அதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த தொண்டர்களும் புறப்பட்டு விட்டார்கள். தளபதியின் கரத்தை வலுப்படுத்த எங்கள் உயிரைக் கொடுத்தாவது உழைப்போம். இனி கரூர் மாவட்டம் தளபதியின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.
கோயில் நிலப் பிரச்சினை:
கடந்த காமராஜர் ஆட்சிக்காலத்தில் (1963 – 1966), ‘இனாம் ஒழிப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டு, கோயில் நிலங்களில் குடியிருந்த ஏழை மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த அமைச்சரும், முதல்வரும் அந்த நிலங்களில் வாழும் ஏழை மக்களைச் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கினார்கள்.
குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் தான் இந்த அநீதி அதிகமாக நடந்தது. அங்குள்ள ஏழை மக்களின் வீடுகளைச் சீல் வைப்பது, காலி செய்வது, நிலங்களை அபகரிப்பது போன்ற செயல்கள் அரங்கேறின. இது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான பிரச்சினை. எனவே, முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, ஏழை மக்களின் நிலப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், அந்த ஏழை எளிய மக்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குக் கடன் பட்டிருப்பார்கள்” என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
