கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தற்காலிக பணி ஆணை தான் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இன்று அரசு பணிக்கான ஆணைகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்று கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் அரசு பணி நியமன ஆணை வழங்குவது என்பது சாட்சிகளை பாதிக்கக்கூடும் செயல் என்றும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வில் இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதில் என்ன தவறு? அவர்களுக்கு பொருளாதார உதவி தேவைப்படும் தானே? என்று கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் சார்பில், கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணை வழங்க வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஏற்கனவே கும்பகோணம் மகாமகம், ஸ்டெர்லைட் போராட்டம் ஆகிய சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்று வாதாடப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில், கரூர் பெருந்துயர விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்ட விசாரணை நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்க தடை இல்லை. ஆனால் இது தற்காலிக பணி நியமன ஆணைகளாக தான் இருக்க வேண்டும்.
முதல்வர் விஜய் தற்போது கரூர் பயணத்தில் இருப்பதால், அதை ரத்து செய்ய முடியாது. எனவே, தற்காலிக பணி ஆணைகளை வழங்கட்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
