தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், கடந்த மே பத்தாம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதலமைச்சர் திருச்சி சென்றார். திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், தன்னை வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் செல்கிறார். கரூர் பெருந்துயர்ச் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக இன்று விஜய் கரூர் செல்வது, தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்காகச் சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தவர், அங்கிருந்து கரூர் சாலை வழியாகக் காரில் புறப்பட்டார். முதலமைச்சர் விஜய்யைக் காணச் சாலையோரங்களில் காத்திருந்த மக்களிடம் அவர் கையைசைத்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முதல்வர் இன்று மதியம் 12.15 மணிக்குக் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். சுமார் 1 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அடுத்து மதியம் 1.25 மணிக்குக் கரூரில் உள்ள சர்க்யூட் ஹவுசுக்குச் செல்லும் அவர், மதிய உணவு அருந்திவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார். மதியம் 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 3 மணிக்கு அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், கரூர் பெருந்துயர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், மாலை 4.10 மணிக்கு அங்கிருந்து சாலை மார்க்கமாகக் காரில் புறப்பட்டுத் திருச்சி விமான நிலையம் வருகிறார். மாலை 6 மணிக்குத் திருச்சி விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் விஜய், தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். இரவு 7 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், இரவு 7.10 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு நீலாங்கரை இல்லத்தைச் சென்றடைகிறார்.
