தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், பாதுகாப்புக் காரணங்களால் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அன்றைய தினமே கரூரிலிருந்து சென்னை திரும்பிய விஜய், பாதிக்கப்பட்டவர்களைச் சென்னைக்கு வரவழைத்து, தனியார் விடுதியில் தங்கவைத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்துள்ள சூழலில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் இன்று முதன்முறையாகக் கரூர் செல்கிறார்.
இதுகுறித்து தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும், கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, இன்று (10.07.2026, வெள்ளிக்கிழமை), கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை, கொங்கு கல்வி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அட்லஸ் கலையரங்க வளாகத்தில், மதியம் 12.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
