கரூர் துயரம் : அரசு வேலை அறிவிப்பை நிறுத்தி வைக்க சிபிஎம் வலியுறுத்தல்

Published On:

| By Pandeeswari Gurusamy

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share