எ.வ.வேலு வழக்கு… லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை : லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 9) இடைக்கால தடை விதித்துள்ளது.

திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக செயல்பட்ட எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் ஊழல் புகார் அளித்தது. அதில், ‘திருப்பூர், கரூர் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த பணி மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு ஊழல் நடந்துள்ளது’ என்று கூறியிருந்தது

ADVERTISEMENT

இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை எ.வ.வேலு மீது வழக்கு பதிவு செய்து அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது.

தற்போது உடல் நல பாதிப்பு காரணமாக எ.வ.வேலு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ மற்றும் லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இந்த மனு இன்று எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு நிபந்தனையுடன் இடைக்கால தடை விதித்தார்.

ADVERTISEMENT

நெடுஞ்சாலைத் துறை தொடர்பான வழக்கு தொடர்பாக, ஜூலை 15, 2026 அன்று விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அதிகாரி முன் எ.வ.வேலு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

மேலும், தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை வரும் ஜூலை 28, 2026-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுவரை இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

ஜூலை 28 வரை, எ.வ.வேலு மீது எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share