தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையேயான சொத்துத் தகராறு தொடர்பான வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும், புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கில், அமைச்சர் நாளை (ஜூலை 10) நேரில் ஆஜராவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது தமிழக நிதி அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் மரிய வில்சன். இவர் சொத்து பிரச்சினை காரணமாக 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் தங்களை, வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்து தன்னையும், தனது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் மரிய வில்சன் சகோதரர் மரிய க்ளோத் புகார் அளித்தார்.
மரிய வில்சன் அமைச்சரான நிலையில் தொழில் போட்டி மற்றும் குடும்ப சொத்துத் தகராறு காரணமாக நடைபெற்ற இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இப்புகாரின் அடிப்படையில், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், தாக்குதல் நடத்துதல், சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல் மற்றும் பெண்ணை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
புதுச்சேரி நீதிமன்ற விசாரணை:
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சேரலாதன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே ஆஜராக உத்தரவிட்டபோது அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. கடந்த ஜூலை 4-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார், “தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதால் மரிய வில்சனால் நேரில் ஆஜராக முடியவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
இதற்கு நீதிபதி, “சனிக்கிழமை விடுமுறை என்பதால் இன்று ஆஜராகுமாறு கூறியிருந்தேன், ஆனால் இன்றும் ஆஜராகவில்லை. என்ன செய்வது?” எனக் கேள்வி எழுப்பியதுடன், ஜூலை 6-ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது மரிய வில்சன் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, ஜூலை 10-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு:
புதுச்சேரி நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், இந்த குற்றவியல் வழக்கை முற்றிலும் தள்ளுபடி செய்யக் கோரியும் அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று (ஜூலை 9) நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தரப்பில், “இது குடும்பப் பிரச்சினை என்பதால், பேசிச் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும், வரும் ஜூலை 13-ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை நெஸ்டர் வில்சன், சகோதரர் மரிய க்ளோத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதே வேளையில், இந்த சமரச முயற்சி எடுக்கப்படுவதால், புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கில் நாளை (ஜூலை 10) அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
