விடுமுறை தினத்தில் கூடவா ஆஜராக முடியாது?: நிதியமைச்சர் மரிய வில்சன் வழக்கில் நீதிபதி கேள்வி!

Published On:

| By Kavi

சகோதரரை தாக்கிய வழக்கில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூலை 4) ஆஜராகவில்லை.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். தற்போது நிதியமைச்சராக உள்ளார்.

ADVERTISEMENT

இவர், தனது சகோதரர் குடும்பத்தினரை வீடு புகுந்து கட்டையால் தாக்கியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தசூழலில் சொத்து பிரச்சினை காரணமாக 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் தங்களை, வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்து தன்னையும், தனது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் மரிய வில்சன் சகோதரர் மரிய க்ளோத் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

இந்த புகாரின் பேரில் மரிய வில்சன் மீது, அத்துமீறி நுழைதல், தாக்குதல், சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பலமுறை வாய்தா வழங்கிய போதும் நீதிமன்றத்தில் மரிய வில்சன் நேரில் ஆஜராகவில்லை.

ADVERTISEMENT

இதனால் குற்றப்பத்திரிகையை நேரில் பெற இன்று (ஜூலை 4) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை.

அவரது சார்பில் நீதிபதி சேரலாதன் முன் ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார், ”தமிழ்நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பான பணிகள் நடந்து வருவதால் நிதியமைச்சர் மரிய வில்சனால் ஆஜராக முடியவில்லை” என்று தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதி, ”சனிக்கிழமை விடுமுறை என்பதால்தான் இன்று (ஜூலை 4) ஆஜராகுமாறு கூறினேன். ஆனால் இன்று கூட ஆஜராகாவிட்டால் என்ன செய்வது? வரும் 6 ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்” என்றார்.

இதற்கு மரிய வில்சன் வழக்கறிஞர், நேரில் ஆஜராக கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி கட்டாயம் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி சேரலாதன் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share