தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை
‘தி ஒயர்’, ஜூலை 01, 2026 அன்று வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.
புது தில்லி: அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயிலைக் கட்டுவதற்காக, பிப்ரவரி 2020-ல் இந்திய அரசால் ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை’ (Shri Ram Janmbhoomi Teerth Kshetra Trust) அமைக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி-ராம கோயில் விவகாரம் தொடர்பான வழக்கில் நவம்பர் 9, 2019 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்தத் தீர்ப்பின் 926-வது பக்கத்தில் உள்ள ‘பகுதி Q’-வில் உச்ச நீதிமன்றம் பின்வருமாறு கூறியிருந்தது:
“மத்திய அரசு, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், ‘அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்துதல் சட்டம், 1993’-ன் (Acquisition of Certain Area at Ayodhya Act 1993) பிரிவு 6 மற்றும் 7-ன் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அத்திட்டம், பிரிவு 6-ன் கீழ் அறங்காவலர் குழு அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான அமைப்பைக் கொண்ட ஒரு அறக்கட்டளையை அமைப்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மத்திய அரசால் உருவாக்கப்படும் அத்திட்டம், அறக்கட்டளை அல்லது அமைப்பின் செயல்பாடுகள் குறித்த அவசியமான ஏற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்; இதில் அறக்கட்டளையின் நிர்வாகம், கோயில் கட்டுமானம் உள்ளிட்ட அறங்காவலர்களின் அதிகாரங்கள் மற்றும் அது தொடர்பான அனைத்து அவசியமான, துணை மற்றும் கூடுதல் விஷயங்களும் அடங்கும்.”

இதன் உருவாக்கத்தை அறிவித்தது யார்?
பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 5, 2020 அன்று நாடாளுமன்றத்தில் இந்த அறக்கட்டளை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். அப்போது இருந்த 15 உறுப்பினர்களில் 12 பேர் இந்திய அரசால் நியமிக்கப்பட்டனர்; மற்ற மூவர் அதன் முதல் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போது இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்?
தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 14 உறுப்பினர்கள் இவர்கள்:
1. கே. பராசரண், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் – நிறுவனர் உறுப்பினர்

2. சுவாமி வாசுதேவானந்த சரஸ்வதி தேவ் மகாராஜ் – உறுப்பினர்

3. சுவாமி விஸ்வபிரசன்ன தீர்த்த மகாராஜ் – உறுப்பினர்

4. பரமானந்த கிரிஜி மகாராஜ் – உறுப்பினர்

5. கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் – பொருளாளர்

6. அனில் மிஸ்ரா – உறுப்பினர்

7. கிருஷ்ணமோகன் – உறுப்பினர்

8. நிருத்யகோபால் தாஸ் – உறுப்பினர்

9. சம்பத் ராய் – பொதுச் செயலாளர்

10. தினேந்திர தாஸ் – உறுப்பினர்

11. பிரசாந்த் லோகண்டே, ஐஏஎஸ் – மத்திய அரசின் பிரதிநிதி, பதவிவழி உறுப்பினர்

12. சஞ்சய் பிரசாத், ஐஏஎஸ் – உத்தரப் பிரதேச அரசின் பிரதிநிதி, பதவிவழி உறுப்பினர்

13. ஷஷாங்க் திரிபாதி, ஐஏஎஸ் – மாவட்ட ஆட்சியர், அயோத்தி

14. நிருபேந்திர மிஸ்ரா, ஐஏஎஸ் – கட்டுமானக் குழுவின் தலைவர், பதவிவழி உறுப்பினர்

இந்த 14 உறுப்பினர்களில் ஒன்பது பேர் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மற்றும் ராமர் கோயில் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்கள்.
தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் (இவர் மீது இன்னும் முதல் தகவல் அறிக்கை – FIR – பதிவு செய்யப்படவில்லை அல்லது இவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை), பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இவர் ஆர்எஸ்எஸ்-இன் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) பிரிவைச் சேர்ந்தவர்; மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்தே அவரது தீவிர எதிர்ப்பாளராக அறியப்பட்ட பிரவீன் தொகாடியாவுடனும் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தவர். ஐந்து மாதங்களுக்கு முன்பு தொகாடியா முதன்முறையாக ராமர் கோயிலைப் பார்வையிடச் சென்றபோது, சம்பத் ராயுடனான தனது “30 ஆண்டுகாலத் தொடர்பை” உறுதிப்படுத்தினார். சம்பத் ராய் அவருக்குக் கோயிலைச் சுற்றிக் காட்டினார். ராய் விஎச்பி-யின் (VHP) சர்வதேச துணைத் தலைவராகவும் உள்ளார்.
பதவிவழி உறுப்பினர்கள் (Ex-officio members) யார்?
பதவிவழி உறுப்பினர்கள் முக்கியமானவர்கள்; ஏனெனில் அவர்கள் அறக்கட்டளையை அரசாங்கத்துடன் இணைப்பதுடன், பொறுப்புக்கூறல், கண்காணிப்பு ஆகியவற்றை உறுதி செய்கின்றனர். நேர்மை அல்லது ஒழுக்கம் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் எழும்போது, பதவிவழி உறுப்பினர்கள் எடுத்த அல்லது எடுக்காத நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படும்.
15 உறுப்பினர்களில் உள்ள இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசின் பிரதிநிதிகள் ஆவர். அவர்களில் ஒருவர் மாவட்ட ஆட்சியர் ஆவார். ஓய்வுபெற்ற முக்கிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். மோடியின் பிரதம மந்திரி அலுவலகத்தில் (PMO) ஒரு காலத்தில் மிக மூத்த அதிகாரியாக இருந்த நிருபேந்திர மிஸ்ரா, இக்கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவரது மகன், தற்போது உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் மேலவை உறுப்பினராக (MLC) உள்ளார்.
‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (கணினி வழி விடைத்தாள் திருத்தும்) முறை சர்ச்சையால் சிபிஎஸ்இ (CBSE) என்ற மதிப்புமிக்க அமைப்பின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவ்வமைப்பின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் லோகண்டே நியமிக்கப்பட்டார். 2001-ஆம் ஆண்டுக்கான யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், சிபிஎஸ்இ தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிதான் உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். அறக்கட்டளையில் உள்துறை அமைச்சகத்தின் முக்கியப் பிரதிநிதியாக இவர் செயல்படுகிறார். முன்னதாக, ஜனவரி 2020-இல், புதிதாக உருவாக்கப்பட்ட அயோத்தி விவகாரப் பிரிவின் தலைவராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஜியான் குமார் (அப்போது கூடுதல் செயலாளராக இருந்தவர்) நியமிக்கப்பட்டிருந்தார்; லோகண்டே பொறுப்பேற்கும் வரை அவர் அந்தப் பதவியில் இருந்தார்.
1995-ஆம் ஆண்டு தொகுதி ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் பிரசாத், உத்தரப் பிரதேசத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். பீகாரின் சீதாமார்கியைச் சேர்ந்த இவர், தற்போது மாநில அரசில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றுகிறார். உள்துறை, தகவல், நெறிமுறை (protocol), கண்காணிப்பு (vigilance), ரகசியப் பிரிவு (Gopan), விசா-கடவுச்சீட்டு , எஸ்டேட் (estate) உள்ளிட்ட பல முக்கியத் துறைகளை இவர் கவனித்து வருகிறார்.
நன்கொடைகள் கையாடல் மற்றும் முறைகேடு விவகாரம் குறித்து இதுவரை ஊடகங்களிடம் பேசிய ஒரே அறங்காவலர் ஐஏஎஸ் அதிகாரி நிருபேந்திர மிஸ்ரா மட்டுமே. இது அவரது உயர்ந்த நிலையையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. உத்தரப் பிரதேசப் பிரிவு அதிகாரியான இவர், 1990-91 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் முலாயம் சிங் யாதவின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார்; பாபர் மசூதியைச் சேதப்படுத்த முயன்ற ‘கார் சேவகர்களுக்கு’ எதிராக யாதவின் அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தபோது இவர் அந்தப் பதவியில் இருந்தார்.
தொடர்ந்து முக்கியப் பதவிக்கு மேல் பதவி வகித்து வரும் மிஸ்ராவைப் பற்றிக் குறிப்பிடும்போது, இந்துத்துவ ஆதரவாளர்கள் பெரும்பாலும் இந்த விஷயத்தைத்தான் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய மிஸ்ரா, ஆகஸ்ட் 30, 2019 அன்று அப்பதவியிலிருந்து விலகினார். விலகும்போது, மோடி தன்மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், “கனம் பொருந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கீழ் நாட்டிற்குச் சேவை செய்தது ஒரு பெரும் பேறு. இந்த வாய்ப்பிற்கும், என்மீது அவர் முழு நம்பிக்கை வைத்ததற்கும் நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்,” என்று கூறினார்.
நியமன விதிகளை மோடி அரசாங்கம் முதன் முதலில் மீறியது மிஸ்ராவின் விஷயத்தில்தான். மே 28, 2014-லேயே, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்னாள் தலைவரான மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நியமன விதிகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் அவசரச் சட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட பின்னரே இது சாத்தியமானது. “மத்திய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒழுங்குமுறை அமைப்புகளின் தன்னாட்சிக்கு இது பெரும் அடியாக அமையும் என்ற ஒத்தகருத்து கொண்டிருந்த அதிகார வர்க்கத்திற்கு இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளித்தது,” என்று அக்காலத்தில் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ (Business Standard) இதழ் எழுதியது.
TRAI சட்டத்தின்படி, அந்த அமைப்பின் தலைவர் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் வேறு எந்தப் பணியையும் மேற்கொள்ள ‘தகுதியற்றவர்’ ஆவார்; ஆனால் மிஸ்ராவின் நியமனம் இந்த விதியை மீறுவதாக அமைந்ததால், சட்டத்தைத் தவிர்ப்பதற்காக அரசு ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், பெயர் குறிப்பிட விரும்பாத ஓய்வுபெற்ற TRAI அதிகாரி ஒருவர் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ இதழிடம் கூறுகையில், “அமைப்பின் முன்னாள் தலைவர் அல்லது உறுப்பினர் எவரும் அப்பதவியிலிருந்து விலகிய பிறகு அரசுப் பணியில் சேர முடியாது” என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று தெரிவித்தார்.
ஒருவேளை அதனால்தான், ஜூன் 19 அன்று, “ராம் மந்திர் நிர்வாகம் முழுவதுமாக மாற்றப்பட வேண்டும்” என்று அவர் கூறியதாக ‘இந்தியா டுடே’ (India Today) செய்தி வெளியிட்டது. நிதி முறைகேடு விவகாரத்திலிருந்து நரேந்திர மோடியை தூரப்படுத்தி வைப்பதற்கான தேவை மிக கடுமையானதாக இருந்திருக்கக்கூடும். அறக்கட்டளை உறுப்பினர்கள் அல்லாதவர்களின் புகைப்படங்களில் மோடியின் புகைப்படம் மட்டுமே அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. ராம் கோயிலுக்குள் மோகன் பகவத்தின் பெயருடன் இவருடைய பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்து மதத் தலைவர்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தபோதிலும், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, ராம் கோயிலில் பூசாரிக்குரிய முக்கியச் சடங்குகளை மோடியே நேரடியாகச் செய்தார் (என்பது குறிப்பிடத்தக்கது).
தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

