முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (ஜூலை 3) கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் இருந்து திருச்செந்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அனிதா ராதாகிருஷ்ணன், ‘காவல்துறை மூலமாக என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்தில் இணைய சொல்கிறார்கள்’ என்று அதிரடி குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
இது தொடர்பாக மதுரை திருநகரில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார், ‘அவரை ராஜினாமா செய்து விட்டு வந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைய சொன்னாங்களாம். அனிதா ராதாகிருஷ்ணன் மாதிரியான ஒரு ரவுடியையும் ஒரு கேவலமான நபரையும் கண்டிப்பாக தவம் இருந்தாலும் நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.
அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடித்தனம் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தவர். அவரால் கடந்த 20 வருடமாக தென் தமிழகம் முழுவதும் அமைதி இல்லாமல் இருக்கிறது.
கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என அத்தனையையும் செய்திருக்கிறார்.
இந்த மாதிரியான ஆட்கள் தவமிருந்து கேட்டாலும் நாங்கள் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.
பிரச்சினையை திசை திருப்புகிறேன் என்று நினைத்துக் கொண்டு இப்படி பேசி இருக்கிறார். முதல்வர் விஜய் காலிலேயே விழுந்தாலும் அவர் சேர்த்துக் கொள்ள மாட்டார்.
இவர்கள் குதிரை பேரும் நடத்தி இருப்பதை நாங்கள் சாட்சியத்தோடு சொல்லி இருக்கிறோம். எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. இன்றைய நாளில் கூட தேர்தலை சந்திக்க நாங்கள் தயார். நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை.
மக்களுக்கு மட்டும்தான் பயந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய தலைவருக்கு இரண்டு ஆண்டுகளாக அழுதத்துக்கு மேல் அழுத்தம் வந்தது. ஆனால் எந்த இடத்திலும் நாங்கள் சமரசமாகவில்லை” என்று கூறினார்
