41 பேர் உயிரிழந்த வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு : விஜய் கரூர் செல்ல எதிர்ப்பு!

Published On:

| By Kavi

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் தன்னை ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். 

கரூரில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி முதல்வர் விஜய் பிரச்சாரத்துக்கு சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் அதிமுகவினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம் என முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியிருந்தார். 

இந்தசூழலில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில்,  ”  இந்த வழக்கில் ஆரம்பத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பல நபர்கள் தற்போது தமிழக அமைச்சரவையில் உறுப்பினர்களாக உள்ளனர்.  இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும்  தவெகவைச் சேர்ந்தவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது அந்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 2026 ஜூலை 2 அன்று பேசும்போது, கரூர் சம்பவம் தொடர்பாக “தீர்க்கப்பட வேண்டிய ஒரு கணக்கு உள்ளது” என்றும்  முந்தைய திமுக அரசு “காவல்துறை மூலம் கரூர் மக்களைக் கொன்றது”  என்றும் கூறியிருக்கிறார்.   நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெற்று வரும் விசாரணையில் செல்வாக்கு செலுத்தும் நோக்கிலேயே  இவ்வாறு அவர் பேசியிருக்கிறார். 

ADVERTISEMENT

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, ​​பொதுப் பதவியில் இருக்கும் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரால் எப்படி இவ்வாறு பேச முடியும். 

அதோடு  உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு  கருணை அடிப்படையிலான நியமனங்கள் மற்றும் இதர சலுகைகளை வழங்குவதற்காக, முதலமைச்சர் விஜய்  ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்லவிருப்பதாக செய்திகள் வருகின்றன. 

அரசு கருணைத் தொகை அல்லது நலத்திட்டங்களை வழங்குவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . எனினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் முக்கிய சாட்சிகள்  என்பதால் அவர்களை முதல்வர் விஜய் உள்ளிட்டோர் சந்தித்து பேசுவது விசாரணையை பாதிக்கும். இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். 

ஆதவ் அர்ஜுனாவின் ஜூலை 2ஆம் தேதி பேசியது சாட்சிகளைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் ” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share