தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் திருச்செந்தூரில் நடந்த கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன் ஜாமீன் கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவு வந்த சற்று நேரத்திலேயே அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்ய, அவர் ஆய்வு மேற்கொண்டிருந்த ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு போலீசார் வந்தனர்.
அவரை கைது செய்வதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
அப்போது அனிதா ராதாகிருஷ்ணன், ’அட்வகேட் வரட்டும் … வேலைய முடிச்சிட்டு எங்கே கூப்பிடுகிறீர்களோ வருகிறோம்.. என்று கூற, இதை ஏற்க மறுத்த போலீசார் எஸ்.பி ஆபீஸுக்கு போகவேண்டும் என்று சொல்ல, ’அட்வகேட் இல்லாமல் நான் எங்கேயும் வரமாட்டேன்… அவர் சென்னையில் இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் பேசி போலீசார் அழைத்துச் சென்றனர். வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் தனது காரில் வருவதாக கூறி ஏறி அமர்ந்தார். ஆனால் அதற்கும் போலீசார் மறுப்புத் தெரிவித்து, போலீஸ் வாகனத்திலேயே செல்லலாம் என்று கூறினர். அப்போது அனிதா ராதாகிருஷ்ணன், ’வேண்டுமானால் நீங்களும் இதிலேயே ஏறுங்க’ என்று கூறினார்.
பின்னர் போலீசார் அவரிடம் பேசி, அவரது கையை பிடித்து போலீஸ் வாகனத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ’போலீஸ் அராஜகம் ஒழிக’ என்று அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து எஸ்.பி அலுவலகத்துக்கு அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்றனர்.
இந்தசூழலில் எஸ்.பி.அலுவலகத்திலேயே அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் வருகைத் தந்து பரிசோதனை ய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
தற்போது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களும் திமுகவினரும் குவிந்து வருவதால், அலுவலக மெயின் வாயில் பகுதியில், தூத்துக்குடி – திருநெல்வேலி 4 வழி சாலை பகுதியில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
