மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு – அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன் உருக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vaigai selvan

முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை.

ADVERTISEMENT

திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரச போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்து விட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது.

மேலும், தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும்கூட, கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

ADVERTISEMENT

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று என்கிற வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளுக்கு நான் கீழ் படிகிறேன்.

ADVERTISEMENT

மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை.

நேரம் வருகிற போது இன்னும் இதுகுறித்து பேசுகிறேன்.

‘புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல’ இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்தாக தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். தொடா்ந்து, முன்னாள் அமைச்சா்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூா் ராஜூ, எம்.சி.சம்பத் ஆகிய மூவரும் தவெகவில் இணைந்தனா்.

இந்த நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் நேற்று நடந்த இணைப்பு நிகழ்வில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளா்மதி ஆகியோர் தவெக பொதுச் செயலரும், அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தனர். அவர்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து விலகி தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.

தற்போது முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share