தேர்தலுக்கு முன்பே சொன்னோம்.. இது வெறும் ‘ட்ரைலர்’ தான் – சி.விஜய பாஸ்கர்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijayabaskar

மக்களின் உணர்வுகளையும் தொண்டர்களின் கருத்துகளையும் மதிக்காமல், எம்.ஜி.ஆரால் ‘தீய சக்தி’ என அடையாளப்படுத்தப்பட்ட திமுகவுடன் கூட்டு வைத்து ஆட்சி அமைக்க முந்தைய அதிமுக தலைமை முயன்றதே தாங்கள் கட்சியை விட்டு வெளியேறக் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைப்பு விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களை த.வெ.க-வில் இணைத்துக் கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த விழாவில் சி.விஜயபாஸ்கர் பேசுகையில்,” கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகத்தோடு நாம் கூட்டணி வைக்க வேண்டும் என்று கட்சியின் அன்றைய தலைமையிடம் நாங்கள் கடுமையாக வலியுறுத்தினோம். ஆனால், தலைமை அதற்குச் செவிமடுக்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், மக்கள் ஏகோபித்த ஆதரவை த.வெ.க-விற்கு வழங்கியதைக் சுட்டிக்காட்டி, நாம் த.வெ.க அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்; அதையும் அவர்கள் ஏற்கவில்லை.

மாறாக, இதைச் செவிமடுக்காத அந்தத் தலைமை, தனிப்பட்ட ஒருவர், இயற்கைக்கு முரணாக எந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் ‘தீய சக்தி’ என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சொன்னாரோ, அந்தத் தீய சக்தியோடு கூட்டு வைத்து ஆட்சி அமைக்க முயன்றார். இதில் எங்களுக்குச் சற்றும் உடன்பாடு இல்லை. அதனாலேயே ஒட்டுமொத்த புதுக்கோட்டை மற்றும் விராலிமலை தொகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டு, இந்த நல்ல முடிவை எடுத்து த.வெ.க-வில் இணைந்துள்ளோம்.” என்றார்.

ADVERTISEMENT

மௌனப் புரட்சி செய்த த.வெ.க தலைவர்

மேலும் பேசிய அவர் “பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது போல, எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து, தமிழ்நாட்டின் அரசியல் திசையைத் தீர்மானித்து, அண்டை மாநிலங்களை அதிர வைத்திருக்கும் மாற்றத்தின் சக்தி நம்முடைய முதலமைச்சர். தமிழக அரசியலில் சத்தமில்லாமல், ஒரு மௌனப் புரட்சியை அவர் நிகழ்த்தியுள்ளார்.

தொண்டர்களைத் தொண்டர்களாகப் பார்க்காமல், தோழர்களாக அரவணைக்கும் உன்னதமான தலைமைப் பண்பு அவரிடம் உள்ளது. அதனால் இந்த இணைப்பு எங்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இனி வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் த.வெ.க-வின் ஒற்றைத் தலைமையின் கீழ் நாம் பயணித்து மாபெரும் வெற்றி வாகை சூடுவோம். புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 7 மணி நேரம் பயணித்து வந்துள்ள இந்தத் தொண்டர் கூட்டம் வெறும் ‘ட்ரைலர்’ தான். விரைவில் த.வெ.க தலைமையிடம் அனுமதி பெற்று, கரூர் மாவட்டத்தையும் முழுமையாக இணைத்து, ஒட்டுமொத்த தமிழகமும் வியக்கும் வகையிலான மாபெரும் ‘மெயின் பிக்சர்’ இணைப்பு விழாவை டெல்டா மண்ணில் நடத்திக் காட்டுவோம். தமிழ்நாட்டில் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் த.வெ.க தான் வெல்லும். அதற்காக நாங்கள் உழைக்க, ஒத்துழைக்க, துணை நிற்க வந்திருக்கிறோம்.” என்றார்.

ADVERTISEMENT

புதிய அரசுக்கு வைக்கப்பட்ட இரு முக்கியக் கோரிக்கைகள்:

விழா மேடையில் த.வெ.க தலைமையிடம் சி.விஜயபாஸ்கர் இரு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

  • காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்: கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இந்த முக்கியத் திட்டத்தை த.வெ.க அரசு உடனடியாகக் கையில் எடுத்து, 7 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான காவேரி நீரை வழங்க வேண்டும்.
  • ஜல்லிக்கட்டுப் போட்டி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு த.வெ.க அரசு எப்போதும் முழு அரணாகத் துணை நிற்க வேண்டும் என்றார்.
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share