அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்துள்ள நிலையில் “வந்துட்டேன்னு சொல்லு.. குட்காவுக்கு லஞ்சம்.. ஓட்டுக்கு பணம்.. சொத்து குவிப்பு என வழக்கு மேலே வழக்கு இருந்தும் உள்ளே வந்துட்டேன்னு சொல்லு” என அறப்போர் இயக்கம் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், “மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம்; தொடவும் விட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம்” என்று உறுதியளித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில், குட்கா ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகளை எதிர்கொண்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் தவெகவில் இணைந்துள்ளார். விஜயபாஸ்கரின் இந்த இணைப்பை முன்வைத்து, ஊழலுக்கு எதிரான ‘அறப்போர் இயக்கம்’ சமூக வலைத்தளங்களில் தவெக தலைமைக்கும், விஜயபாஸ்கருக்கும் எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “Party Fund விஜயபாஸ்கர்
- சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
- தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
- இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
- சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
- தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா?? தவெக விஜய்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
