கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைவது தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சித்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சுரங்க நில ஒதுக்கீட்டு அரசாணை காலவதியாக நிலை இருந்தது. ஆனால் முதல்வர் விஜய்யின் தமிழ்நாடு அரசு இந்த நில ஒதுக்கீட்டு அரசாணையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து புதிய அரசாணை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வெளியிட்ட அறிக்கையில், “கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று, ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தைக் கைவிட வேண்டும் என தங்கள் கட்சியின் செயற்குழுவில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றிய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் இந்த தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்” என குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் தலைமையிலான தவெக அரசை ஆதரிக்கும்- ஆட்சியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சியும் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து சர்ச்சைக்குரிய இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் மனு கொடுத்தார்.
