“குட்கா கறைகளைக் கூட நீக்கும் வாஷிங் மெஷின்” – கனிமொழி எம்.பி. அதிரடி விமர்சனம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

kanimozhi

தமிழகத்தில் குட்கா கறைகளை நீக்கும் புதிய மாடல் ‘வாஷிங் மெஷின்’ அறிமுகமாகியுள்ளதா என திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி காரசாரமாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில், ஆயிரக்கணக்கான அதிமுகவினர் இன்று (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர். இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இரண்டு அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ADVERTISEMENT

தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழக வெற்றிக் கழகம் ஒரு “தூய சக்தி” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து பேசி வந்தார். இவ்வாறான சூழலில், பல்வேறு வழக்குகளைப் பின்னணியாகக் கொண்ட மாற்றுக்கட்சியினர் தவெக-வில் ஐக்கியமாவது தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங் மெஷின்’ ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா?” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share