தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம் பேசிய வழக்கில் நாமக்கல் அசோக்குமார் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க, சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம் பேசப்பட்டது என்பது குற்றச்சாட்டு.
இக்குற்றச்சாட்டின் கீழ் திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமான திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு இந்த குதிரை பேர சம்பவத்தில் தொடர்பு உள்ளதாகவும் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் அசோக்குமார், சென்னையை சேர்ந்த செல்வன், ஸ்ரீனிவாசன், ராஜேஷ் ஆகியோரை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி வழக்கில் இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
