தவெக எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி வளைக்க முயற்சித்த விவகாரத்தில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்
இது தொடர்பாக சென்னையில் இன்று ஜூலை 1-ம் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது: மு.க.ஸ்டாலின் அவர்களும், எடப்பாடி அவர்களும் சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருந்தோம். அதுதான் இன்றைக்கு அதன் வெளிப்பாடு. திமுகவைச் சேர்ந்த முக்கியமான நபர்கள், செந்தில் பாலாஜி போன்ற நபர்கள், ஸ்டாலினுடைய உத்தரவு மற்றும் உதயநிதி உத்தரவு என்று கூறி, எங்களுடைய பல எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு ‘நாங்கள் உங்களுக்கு 10 கோடி, 20 கோடி, 50 கோடி ரூபாய் தருகிறோம்’ என்று கடந்த 40 நாட்களாகப் பேசி வருகிறார்கள். அவர்கள் தொடர்பு கொள்ளாத எம்.எல்.ஏக்களே கிடையாது. அனைவரிடமும் ஒவ்வொரு வழியிலும் அவர்கள் பேசிகிட்டேதான் வராங்க. நாங்கள் கண்டிப்பாகச் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம் என்ற சூழலில், எங்கள் எம்.எல்.ஏ ஒருவர் வேண்டாம் என்று சொன்ன பிறகும் அவரை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்கள். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், குதிரை பேரத்திற்கு முற்பட்ட நபர்களைக் காவல்துறை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறது. நரேஷ், தியாகராஜன் என மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நரேஷ் என்பவர் நேரடியாக செந்தில் பாலாஜியுடனும், அவருடைய தம்பி அசோக்குடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். தினமும் இது தொடர்பாகப் பேசி, எப்ப எப்ப யார் யாரிடம் எவ்வளவு பணம் கொடுக்கணும், எந்தெந்த எம்.எல்.ஏ-வை வாங்கப் போறோம் என்று திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாகக் காவல்துறை மூன்று பேரைக் கைது செய்திருக்கிறது. மேலும் இது சம்பந்தமாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
கேவலமான, கீழ்த்தரமான வேலை
இப்படியொரு கேவலமான, கீழ்த்தரமான வேலையை திரு. ஸ்டாலினும், உதயநிதியும் அவர்கள் கையில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜி போன்ற நபர்களை முடுக்கிவிட்டு, முழு நேரமாக மற்ற கட்சி எம்.எல்.ஏக்களைப் பல கோடி ரூபாய் கொடுத்து, 50 கோடி வரை பேரம் பேசி வருகிறார்கள். அதனால்தான் ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ’30 நாள், 30 நாள்’ என்று சொல்லி வருகிறார். வரும் கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம், அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இது குறித்து பல எம்.எல்.ஏக்கள் புகார் அளித்துள்ளனர். ஒரு சில பேர் மிரட்டப்பட்டுள்ளனர், மிரட்டப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருத்தர் இன்று புகார் அளித்துள்ளார். மக்கள் அனைவரும் இதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான கோடி, லட்சக்கணக்கான கோடி தமிழக மக்களிடம் கடந்த 5 வருடங்களில் கொள்ளையடித்துவிட்டு, இன்று எப்படியாவது எம்.எல்.ஏக்களை விலைப் பேசி வாங்கிவிடலாம் என்று குறுக்கு வழியில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு எடப்பாடியும் ஒரு வகையில் அவரோடு கூட்டு சேர்ந்து கொண்டு, குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறார்கள். புகாரின் அடிப்படையில் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பூர்வமாக யார் யாரெல்லாம் இவர்கள் தொடர்பு கொண்டு வரார்களோ, அதெல்லாம் புகாராக வந்துள்ளது. செந்தில் பாலாஜியின் கரூர் கேங், கரூர் கம்பெனி என அழைக்கப்படும் நபர்கள் இதில் நேரடியாகத் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.

கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா?
கண்டிப்பாக அனைவர் மீதும் காவல்துறை சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து, இதில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். இது மாதிரியான குதிரை பேரத்தில் இவர்களை நிறுத்த வேண்டும். இதை ஒரு வழியில் இவங்க செஞ்சுகிட்டு, வேற வழியில வந்து எல்லாரையும் ‘எங்க மேல புகார் சொல்வோம்’னு சொல்லி, ஒரு கீழ்த்தரமான வேலையை ஸ்டாலின் செஞ்சுகிட்டு இருக்காரு, கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா? இன்னைக்கு 40 கோடி, 50 கோடி கொடுத்து ஒரு எம்.எல்.ஏ.-வை விலைக்கு வாங்கும் அளவிற்கு ஸ்டாலினுக்குக் கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா? மக்கள் உங்களுக்கு எதிராகத் தீர்ப்பளிச்சிட்டாங்க. உங்கள் கூட்டணி கட்சி எல்லாம் நீங்கள் செய்யற வேலையைப் பார்த்துட்டு உங்ககிட்ட இருந்து வெளியேறிட்டாங்க. எடப்பாடியை முதலமைச்சராக ஆக்கணும்னு போய் ஒவ்வொரு கூட்டணி கட்சித் தலைவர்கிட்டயும் பேசி இருக்கீங்க. இதற்கு மேல கேவலமான வேலையை ஸ்டாலின் செய்ய முடியுமா?
அரசியலை விட்டு ஒதுங்கிடுங்க..
எங்களுடைய எம்.எல்.ஏ.-க்கள் எல்லாம் மூணு லட்சம், நாலு லட்சம் செலவு பண்ணிதான் எம்.எல்.ஏ. ஆனார்கள். உங்களைப் போல 1000 கோடி, 500 கோடி என்று ஒரு மாவட்டத்துக்குச் செலவு பண்ணல. அடுத்த தேர்தலையும் நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம். மக்கள் எங்களுக்கு 100% நம்பிக்கையோடு வாக்களித்து இருக்காங்க. உங்களை மாதிரி ஓட்டுக்கு 2,000 கொடுத்தோ, இல்ல ஒரு தொகுதிக்கு 70 கோடி செலவு பண்ணியோலாம் நாங்க யாரும் வரல. அதனால அடுத்த தேர்தலை எப்ப வேணாலும் சந்திப்போம். இந்த கேவலமான வேலையை விட்டுவிட்டு, கடந்த ஐந்து வருஷம் செய்த தீய செயல்களை உணர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தயவுசெய்து அரசியலிலிருந்து ஒதுங்கி விடுங்கள். மிஸ்டர் ஸ்டாலின், இதற்கு மேல் அரசியலிலிருந்து ஒதுங்கி விடுங்கள். முதலமைச்சராக இருந்தவர் இன்று அரசியலில் தோற்றுப் போயிருக்கிறார். 50 வருஷத்துல இது போன்ற கேவலம் நடந்திருக்கிறதா? மக்கள் உங்களுக்குக் கொடுத்த பாடம் இது. இனியாவது திருந்துங்கள். உங்கள் மகன் உதயநிதியை ஒழுங்காக வழிகாட்டுங்கள்.
செந்தில் பாலாஜியை நம்பினால்..
செந்தில் பாலாஜி போன்ற நபர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்தினீர்கள் என்றால் இப்படித்தான் இருக்கும். இந்த மாதிரி கேவலமான வேலையை விட்டுவிட்டு, மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தயவுசெய்து அரசியலை விட்டு ஒதுங்கி விடுங்கள். இல்லாட்டி திமுக-வும் அதிமுக-வும் மொத்தமாக வந்து பாரதிய ஜனதா கட்சி மாதிரி இணைஞ்சிட்டு எதாவது உங்களுக்கான அரசியல் ஆதரவைத் தேடிக்கோங்க.
இந்த மாதிரி கைது நடந்தவுடன், அதைச் சமாளிக்க கடிதம் எழுதிட்டு இருக்காரு. எதுக்கு கவர்னர் கடிதம்? ஆதாரம் இருந்தா கொடுக்க வேண்டியதுதானே. நாங்கதானே ஆதாரம் இருக்குன்னு சொல்லுவோம். நாங்கள் யாரிடமும் குதிரை பேரம் செய்யவில்லை. எடப்பாடியை முதலமைச்சர் ஆக்குறதுக்காகவா கூட்டணி கட்சிகள் எல்லாம் வேலை பார்த்தாங்க? இந்த மாதிரியான கேவலமான ப்ரோபோசலை ஸ்டாலின் செய்யலாமா? செஞ்சதுனால தான் கூட்டணியில் இருந்து வெளியேறுனாங்க. திமுக-வில் இருக்குற யாருக்காவது அரசியல் இருக்கா? அதிமுக-வில் யாருக்காவது அரசியல் எதிர்காலம் இருக்கா? எம்.எல்.ஏ.-வாக இருப்பவர்கள் மக்களைச் சந்திக்க முடியாமல் அஞ்சு வருஷம் சும்மா இருக்க முடியாமல் ராஜினாமா பண்றோம்றாங்க. இந்தச் சூழலுக்குத் தள்ளியது ஸ்டாலினும், எடப்பாடியும்தான்.
அரசியலில் தேறவே மாட்டார்..
உங்களுடைய மகன் அரசியல்ல எதுவுமே தேரமாட்டார்னு தெரிஞ்சுகிட்டு, இப்படியாவது குறுக்கு புத்தியில நீங்க யாரையாவது விலை கொடுத்து வாங்க முடியும்னு நினைச்சீங்கன்னா அது நடக்காது. உங்கள் மகன் உதயநிதியை முதல்ல ட்ரெய்னிங் பண்ற வேலையை பாருங்க. கடைசி வரை உங்களுக்குச் ஸ்டாலின் தலைமையிலான அரசுனு சொல்ல தைரியம் வரவில்லை, திராவிட மாடல் அரசுன்னு தான் சொல்லிருக்கீங்க. திமுக-வின் அத்தியாயம் இதோடு முடிஞ்சுவிட்டது. என்னைக்கு இந்த கேவலமான வேலை, அதாவது அதிமுக-வோட சேர்ந்து ஆட்சி அமைக்கணும், பிஜேபி-யோட சேர்ந்து ஆட்சி அமைக்கணும் முயற்சி செஞ்சாங்களோ, திமுக-வோட எதிர்காலம் இதோடு முடிஞ்சுவிட்டது.
செந்தில் பாலாஜி, அசோக்குமார்
பல பேரிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியது எங்களுக்கு ஆதாரத்துடன் காவல்துறைக்கு வந்ததால், செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய தம்பி, அவருடன் இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன. தற்போது காவல்துறை விசாரணையைத் தொடர்ந்து கொண்டே வராங்க, கண்டிப்பாக அடுத்தடுத்த கட்டங்களில் யார் யார் கைது செய்யப்படப் போகிறார்களோ அதை காவல்துறை தெரிவிப்பார்கள்.

விஜய் சொன்னது என்ன?
வைகோ அவர்களும் எங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்புகிறார்கள். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. வைகோ அவர்கள் திமுகவுடன் பயணிக்க முடியாது என்று அவரே தெரிவித்திருந்தார். அது அவருடைய தனிப்பட்ட முடிவு. அவரை யாரையும் ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கேட்கவில்லை.
பிற கட்சிகளில் இருந்து வருபவர்கள் மீதான வழக்குகளை நாங்கள் கைவிடவில்லை; சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அதைத்தான் செய்வோம். இதில் எந்த சமரசமும் கிடையாது. பல மாவட்ட செயலாளர்கள் தினந்தோறும் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அவர்கள் மீது வழக்குகள் இருக்கலாம், ஆனால் சட்டப்பூர்வமாக எது தேவையோ அதைத்தான் செய்வோம். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
