திமுக கூட்டணியில் இருந்து மதிமுக கடந்த வாரம் வெளியேறிய நிலையில், தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்படப் போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். இதனிடையே, சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்திலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் வைகோ ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார்.
திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கேட்டுக்கொண்டதாக வைகோ வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், “அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலைச் சந்தித்தால், அவர்களுக்காக நானே நேரடியாக வந்து தேர்தல் பிரசாரம் செய்வேன்” என்று முதல்வர் விஜய் தன்னிடம் கூறியதாகவும் வைகோ குறிப்பிட்டிருந்தார்.
வைகோவின் இந்த அதிரடி வாக்குமூலம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி திமுக தரப்பில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக, ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போது ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குச் சட்டமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லை. இதனால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், அந்த இரு எம்.எல்.ஏ-க்களையும் பதவி விலகச் செய்ய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடன் இணைந்து, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரத்தை வைகோ அவர்களே தற்போது வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளார்.
இத்தகைய சட்டவிரோத குதிரைப் பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு (DVAC) உத்தரவிட வேண்டும் என்று கோரி, திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி தமிழக ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதற்கான வீடியோ ஆதாரங்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
