தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறுகையில், சாலைப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்களின் வாழ்விடங்கள் மற்றும் பணிப் பாதுகாப்பு குறித்து அரசு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
அதேபோல், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டகாலமாகப் பல கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன. அவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக்கொண்டோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார்.” என்றார்.
தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்ததாவது:
“தமிழ்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். தமிழகத்தில் தற்போது வேலையின்மை என்பது மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தற்போதிருக்கும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளதால் கல்வித் தரம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளில் அரசு உடனடியாகத் தலையிட்டு, தேர்வு எழுதியவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். அதன் மூலம் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். வரவிருக்கும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் மக்கள் எதிர்பார்க்கும் இந்த அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று கோரியுள்ளோம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘சிங்கப்பெண் படை’ என்ற சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், இதில் நியமிக்கப்பட்ட காவலர்களுக்குப் பாலின சமத்துவம் மற்றும் குற்றங்களின் தன்மையைப் புரிந்துகொண்டு பணியாற்றுவது குறித்த சிறப்புப் பயிற்சிகளை அரசு வழங்க வேண்டும்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் தொகுப்புச் சட்டத்திற்கான விதிகள் தமிழ்நாட்டில் இன்னும் உருவாக்கப்படவில்லை. மத்திய அரசின் இந்தச் சட்டம் தொழிலாளர் நலனுக்கு எதிரானது என்பதால், அதனை அப்படியே அமல்படுத்தக் கூடாது.
இச்சட்டம் குறித்து ஆய்வு செய்ய, கேரள அரசு ஓய்வு பெற்ற நீதிபதி கோபால் கௌடே தலைமையில் ஒரு குழுவை அமைத்து, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. அந்தப் பரிந்துரைகளைத் தமிழக அரசும் பெற்று, அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடி, தொழிலாளர் நலன் காக்கும் விதிகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.” என்றார்.
காவிரி விவகாரத்தில் ஒருமித்த கருத்து தேவை
மேலும் பேசிய அவர் “காவிரி நீர் விவகாரத்தில் தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாகப் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், விவசாயச் சங்கங்களுக்கும், அரசுக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் உருவாகியிருப்பது நல்லதல்ல. சட்டமன்றத்தில் திடீரென ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரியதே இந்த முரண்பாட்டுக்குக் காரணம். வழக்கமாக இது போன்ற தீர்மானங்களைக் கொண்டு வருவதற்கு முன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்து எட்டப்படுவதுதான் வழக்கம்.
நடந்தது எதுவாக இருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஒற்றைக் கருத்தை உருவாக்க, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். எந்த அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்தது என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். எங்களின் இந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார். விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் ” என்று அவர் கூறினார்.
தவெக கூட்டணியில் இல்லை
தொடர்ந்து பேசிய அவர்கள் “தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை. அதே சமயம் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்” என தெரிவித்தனர்.
