தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய் தலைமையில் இன்று ஜூலை 1-ந் தேதி தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தவெக ஆட்சிக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகள், அமைச்சரவையிலும் பங்கு பெற்றுள்ளன. தற்போது மதிமுகவும் தவெக ஆட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.



இந்நிலையில் தவெகவின் தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

ஜான் ஆரோக்கியசாமி
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூரை அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சந்தித்த போது முதல்வரின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் உடன் இருந்தார். ஜான் ஆரோக்கியசாமிதான் மாணிக்கம் தாகூருக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.
புதிய கூட்டணி
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தவெக தோழமைக் கட்சிகள் அனைத்தும் இணைந்து “புதிய கூட்டணி” அறிவிப்பை வெளியிடக் கூடும்; புதிய கூட்டணியின் பெயரும் அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இடதுசாரிகள் புறக்கணிப்பு?
இதனிடையே சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரி கட்சிகள், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இன்று காலையே முதல்வர் விஜய்யை சந்தித்து மக்கள் நல கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
