தம் மீதான அவதூறு வழக்கை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. வாபஸ் பெற்றது தொடர்பாக வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
DMK Files என்ற பெயரில் 2023-ல் அப்போது தமிழக பாஜக தலைவராக இருத அண்ணாமலை, சில ஆவணங்களை வெளியிட்டார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரின் சொத்து விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
இதனையடுத்து அண்ணாமலை மீது டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் டிஆர் பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டிஆர் பாலு எம்.பி. வாபஸ் பெற்றார்.
இது தொடர்பாக அண்ணாமலை கூறியுள்ளதாவது: DMK Files மூலம் டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டதற்காக, அவர் என் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்து, இழப்பீடாக ₹100 கோடியைக் கோரியிருந்தார்.
வழக்கின் ஒரு கட்டத்திற்குப் பிறகு, நானே என் தரப்பு வாதங்களை முன்வைத்து, அவரை நேரில் குறுக்கு விசாரணை செய்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அந்த விவரங்கள் பொது வெளியில் உள்ளன.
மேலும், குறுக்கு விசாரணையின் போது, டி.ஆர். பாலு நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஆதாரம் ஏதுமின்றி என் மீது அவதூறான கருத்துக்களைக் கூறினார். அதற்காக, அதே நீதிமன்றத்தில் நான் அவர் மீது ஒரு வழக்கைத் தொடர்ந்தேன்.
இன்று, டி.ஆர். பாலு தனது சொந்த விருப்பத்தின் பேரில், என் மீது அவர் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். அவர்தான் என் மீது இந்த அவதூறு வழக்கைச் தொடர்ந்தார்; அதைத் தொடர்வதும் அல்லது வாபஸ் பெறுவதும் அவருடைய முடிவு, என்னுடையது அல்ல.
முந்தைய திமுக அரசு மற்றும் திமுகவின் சில உறுப்பினர்கள் மீது நான் இதுவரை முன்வைத்த ஒவ்வொரு கருத்திலும் நான் உறுதியாக நிற்கிறேன் என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த வழக்கின் விசாரணையின் போது ஆதரவளித்த வழக்கறிஞர் பால் கனகராஜ், வழக்கறிஞர் குமரகுரு மற்றும் பாஜக சட்டக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாய்மையே வெல்லும்! இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி!. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
