அண்ணாமலை மீதான வழக்கை திமுக எம்.பி.டி.ஆர்.பாலு திரும்ப பெற்றார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்.பிக்கள் கனிமொழி, டிஆர்.பாலு உள்ளிட்ட 12 நபர்களின் சொத்து பட்டியலை டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரில், 2023 ஏப்ரல் மாதம் முன்னாள் பாஜக தலைவரும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.
இதில் டி.ஆர் பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள், தன்னுடைய பெயருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரியிருந்தார்.
இந்த வழக்கில் சென்னை பெருநகர சைதாப்பேட்டை 17 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன் குறுக்கு விசாரணை நடந்து வந்தது.
இதில் டி.ஆர்.பாலுவும், அண்ணாமலையும் மாறி மாறி கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
கடந்த 26ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, டி.ஆர்.பாலு சார்பில், அண்ணாமலை மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
