த.வெ.க எம்எல்ஏ புகார்: மூவர் கைது சட்டவிரோதம் – என்.ஆர்.இளங்கோ பேட்டி!

Published On:

| By Kavi

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதற்கு தன்னிடம் பேரம் பேசியதாக, ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின்பேரில், திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன்  ஆகிய மூன்று பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். 

இவர்கள் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 15 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடர்பாக  திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ  நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், ”இன்றைக்கு மதிய வேளையில் தமிழக அரசினுடைய ஒரு பத்திரிகை செய்தி குறிப்பின் வாயிலாக, தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர், ’வரக்கூடிய சட்டமன்ற தொடரில் ஒரு தீர்மானம் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வருவதாகவும், அப்படி கொண்டு வரும் போது அந்த தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும், அப்படி செய்தால் 35 கோடி ரூபாய் தருகிறோம்’ என்று ஒரு நபர் கேட்டதாகவும், மிரட்டியதாகவும் 29 ஆம் தேதி ஒரு புகார் கொடுக்கப்பட்டு, அதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றைக்கு மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். கரூரை சார்ந்த கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர் ஒருத்தர் அவரையும் கைது செய்து வைத்திருக்கிறார்கள். எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை, நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்படுத்தவில்லை. 

ADVERTISEMENT

இந்த நேரத்தில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மூன்று முக்கிய வாதங்களை எடுத்து வைத்தோம். 

ஒன்று, இது லஞ்ச ஊழல் குற்றம். லஞ்ச ஒழிப்பு துறை 1960களிலேயே நிர்மாணிக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்பு துறை தமிழ்நாடு முழுவதற்கும் அதிகாரம் கொண்ட ஒரு காவல் நிலையமாக அறிவிக்கப்பட்டு, லஞ்ச ஊழல் குற்றங்களை அந்த துறைதான் விசாரிக்க வேண்டும். அப்படி வேறு ஏதாவது ஒரு காவல் துறை பிரிவு விசாரிக்க வேண்டும் என்றால் அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். உங்களுக்கெல்லாம் தெரிந்த வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது உள்ள ஒரு மூன்று குற்ற வழக்குகளை, லஞ்ச ஒழிப்பு வழக்குகளை சிபிசிஐடியினர் விசாரித்தார்கள்.

ADVERTISEMENT

அதற்கு தனிப்பட்ட அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிபிசிஐடி லஞ்ச வழக்கை விசாரித்தார்கள். ஆனால், இந்த வழக்கில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டு, அந்த புகார் டி5 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதியப்பட்டிருக்கிறது.

வழக்கு பதியும் போதே அது லஞ்ச ஒழிப்பு வழக்கு, லஞ்ச ஊழல் வழக்கு என்று  கமிஷனருக்கும், துணை கமிஷனருக்கும், இன்ஸ்பெக்டருக்கும் தெரிந்திருக்கிறது. இருந்தாலும் அந்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பவில்லை. ஏன் அனுப்பவில்லை என்றால், லஞ்ச ஒழிப்பு துறைக்கு என்று ஒரு ‘விஜிலன்ஸ் மேனுவல்’  இருக்கிறது.

அந்த மேனுவல் பிரகாரம் பல நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதற்காக இப்படி டி5 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் மூலமாக ஒரு புகாரை வாங்கி பதிவு செய்து, இன்றைக்கு மதியம் ஏறத்தாழ ஒரு மணி அளவில் அவர்களை கைது செய்தது போல் ஒரு புகாரை தயாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள்.

அப்போது நாங்கள் முன்வைத்த வாதங்கள் என்னவென்றால், உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு குற்றவாளிக்கும், குற்றம் சுமத்தப்பட்டவருக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இரண்டு உள்ளது. ஒன்று, ஏழு வருடங்களுக்கு குறைவாக தண்டிக்கக்கூடிய குற்றங்களில் கைது செய்வதற்கு முன்பாக அவசியமாக, கட்டாயமாக ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த நோட்டீஸில் நீங்கள் இந்த விசாரணையில் கலந்து கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். அப்படி கலந்து கொள்ளாவிட்டால், விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் அதற்கு பிறகுதான் கைது செய்யப்பட வேண்டும்.

இரண்டாவது, கைது செய்தவுடன் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை எழுத்து மூலமாக தர வேண்டும். இந்த இரண்டையும் செய்தது போல் அவர்கள் ஒரு ஆவணத்தை தாக்கல் செய்தார்கள். ஆனால் நீதிமன்றம் கேட்டபோது, ‘விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி 30 ஆம் தேதி அன்றைக்கு நோட்டீஸ் கொடுத்தோம் ‘ என்றார்கள்.

நோட்டீஸில்  பார்த்தால் 29 ஆம் தேதியே அது கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டதே 30 ஆம் தேதிதான்.  இதுபற்றி நீதிமன்றம், ’30 ஆம் தேதிக்கு கொடுத்த எப்.ஐ.ஆருக்கு எப்படி 29 ஆம் தேதி நீங்க நோட்டீஸ் கொடுப்பீங்க?’ என்று கேட்டதற்கு அவர்கள் வந்து ‘முதற்கட்ட விசாரணைக்கு நாங்கள் கொடுத்தோம்’ என்று பதிலளித்தார்கள். இது போன்ற பல நடைமுறை சட்டங்களை பின்பற்றாமல், அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையாக இந்த கைது நடந்திருக்கிறது என்று நாங்கள் விளக்கியிருக்கிறோம். 

இரண்டாவதாக, ஒரு  த.வெ.க எம்.எல்.ஏவிற்கு பணம் கொடுத்ததாக அதை அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் அந்த குற்றமே நிகழவில்லை . ஒரு முயற்சிதான் நடந்திருக்கிறது.

அதற்கு இவ்வளவு துரிதமாக செயல்படும் காவல்துறை, ஏறக்குறைய நேற்றுவரை ஆறு அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத்திலேயே த.வெ.கவில் இணைகிறார்களே, அப்படி என்றால் லஞ்ச ஒழிப்பு துறையும் குற்றத்தை தடுக்க வேண்டிய காவல்துறையும் ஏன் இதை பார்த்து சும்மா இருக்கிறது? அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்ற வாதத்தையும் நாங்கள் முன்வைத்திருக்கிறோம் .

இது இந்த ரிமாண்ட் ப்ரொசீடிங்ஸ்க்கு  அது தேவையில்லை’ என்றாலும் கூட, நாங்கள் இந்த வாதத்தை எடுத்து வைத்திருக்கிறோம். அதாவது அதிமுகவிலிருந்து விலகிச் செல்லக்கூடிய எம்.எல்.ஏக்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவில் சட்டமன்றத்திலேயே சேர்வது என்பது ஒரு ‘ஹார்ஸ் ட்ரேடிங்’ (Horse trading).

அதில் லஞ்சம் நடமாடி இருக்கிறது. அதை மதிமுகவினுடைய தலைவர் வைகோ சொல்லி இருக்கிறார். லஞ்ச ஒழிப்பு துறை குற்றவாளிகளை பிடிப்பது மட்டுமல்ல, குற்றத்தை தடுப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏன் லஞ்ச ஒழிப்பு துறையில் அத்தனை அதிகாரிகள் இருக்கும்போது இதை பார்த்து ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை நாங்கள் வைத்திருக்கிறோம். வரக்கூடிய எல்லா நீதிமன்ற நடவடிக்கைகளிலும் இந்த கேள்வியை எடுத்து வைப்போம். அதற்கு கழகத்தினுடைய அமைப்பு செயலாளர் அவர்களும் இன்றைக்கு காலையில் கவர்னர் அவர்களுக்கும், டிவிஏசிக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். இதுதான் இந்த அரசினுடைய இரட்டை போக்காக இருக்கிறது .

இந்த நிலையில் இந்த கைது செல்லாது என்று நாங்கள் வாதத்தை எடுத்து வைத்திருக்கிறோம். அந்த வாதத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு” என்று கூறினார். 

தொடர்ந்து ஆளுங்கட்சி மீதான  குதிரை பேர குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காக இந்த வழக்கா? என்று செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு அவர்,  ”அரசின் மீது இருக்கக்கூடிய பல்வேறு குற்றச்சாட்டுகள், அரசினுடைய தவறுகள், அரசினுடைய இயலாமை மற்றும் அமைச்சர்கள் மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, மக்களைத் திசை திருப்புவதற்காக இது போன்ற இல்லாத, நடக்காத குற்றங்கள் மீது வழக்கு பதிவு செய்வதாகத்தான் என்று நாங்கள் பார்க்கிறோம்” என்றார். 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறை கூறுகிறதே?

இவர்களை கைது செய்வதற்கே முகாந்திரம் இல்லை என்று சொல்கிறோம். எப்.ஐ.ஆரில் முரண்பாடுகள் இருக்கிறது. பிறகு எப்படி இவர்கள் உடந்தையாக இருந்தார்கள் என்று சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share