சிவி சண்முகத்துக்கு எந்த பதவியும் வழங்கப்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வேலுமணி தரப்பினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய புதிய கட்சி பதவி வேண்டாம் என்று நத்தம் விஸ்வநாதன், வேலுமணி ,தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில்,
2026ல் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம்.
மற்ற தொகுதிகளில் பெரும்பான்மையான வேட்பாளர்கள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவியதோடு மிகுந்த மன வேதனையையும் மனசோர்வும் அடைந்தனர். இது அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் அறிந்ததே.
அதிமுக பொதுச்செயலாளராகிய நீங்கள் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்ததனால் இந்த சூழ்நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சியாக நாம் செயல்படுவோம் என நீங்கள் முடிவெடுத்திருந்திருந்தால் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.
தேர்தல் முடிவு வெளியான மே 4ஆம் தேதிக்கு பின்பு அதிமுகவை வலுப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளாக செயல்பட்ட நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம், கே.பி அன்பழகன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்ட அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 47 பேரில் 25 பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை, எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகள், திமுக எதிர்ப்பில் வளர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்ததன் நோக்கம் இதுதான்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக அதிமுகவில் வகித்து வந்த தலைமை கழக பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் நிர்வாகிகளாக பணியாற்றியவர்களை அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தங்களால் விடுவிக்கப்பட்டு மிகுந்த மனச்சோர்வுடன் தொடர்ந்து அதிமுக பணியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு உங்களை தமிழக முதல்வராகவும், கட்சியின் பொதுச் செயலாளராக அமர வைக்கவும் அதிமுக மீது தொடரப்பட்ட வழக்குகளை எதிர் கொள்ளவும் முன்னின்ற சிவி சண்முகத்துக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைத்தது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு சேகர், தேனி மாவட்ட செயலாளர் ஜக்கையன், தஞ்சாவூர் மாநகர் செயலாளர் சரவணன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை ஆர் தமிழ்ச்செல்வன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்படவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
தேர்தலுக்கு முன் பின் தங்களின் செயல்பாடுகளால் விலகி சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அதிமுகவில் ஒருங்கிணைந்து தங்களின் தலைமையின் கீழ் செயல்பட, அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓஎஸ் மணியன் ஆகியோர்களை அனுப்பி கேட்டுக் கொண்டதன் பேரில் நாங்கள் சபாநாயகரிடம் கொடுத்த தகுதி நீக்க கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டோம்.
அதேபோல் நீங்களும் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் கடிதத்தை திருப்பி பெற்றுக் கொண்டீர்கள்.
அதன்படி ஏற்படுத்திக் கொண்ட சமரச உடன்படிக்கையின் படி தங்களால் மே 13 அன்று கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் அவரவர் எந்த பதவியில் வகித்து வந்தனரோ, அந்த கழகப் பொறுப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தீர்கள்.
குறிப்பிட்ட காலம் கடந்து சென்ற நிலையில் ஜூன் 22 அன்று எஸ்பி வேலுமணி மற்றும் கோ ஹரி ஆகிய இருவரும் தலைமைச் செயலக அலுவலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, மே 13 அன்று பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதிமுக பதவிகளில் நியமிக்க அறிவிப்பு குறித்து நினைவுபடுத்தி ஏற்கனவே அவரவர் வகித்து வந்த பதவிகளையும் மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உறுதிப்பட தெரிவித்திருந்தோம்.
ஆனால் தாங்கள் அறிவித்துள்ள கட்சி பொறுப்பாளர்கள் பட்டியலை பார்க்கும்போது அதிமுக வளர்ச்சியை கருத்தில் கொண்டும், கட்சி நலனை கருத்தில் கொண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. தாங்கள் ஒப்புக் கொண்டு உறுதி அளித்தபடி தங்களால் கடந்த மாதம் கட்சி பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் நியமிக்கப்படவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையார் காலத்தில் அதிமுகவில் ஜா அணி, ஜெ அணி என இரு பிரிவுகளாக பிளவு ஏற்பட்டு மீண்டும் இணைந்த போது கட்சி பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அவர்கள் வகித்து வந்த பதவிகளிலேயே தொடரும் வகையில் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி அவர்களும் கட்சி பதவிகளில் தொடர்ந்து பணியாற்றினர்.
அதுமட்டுமின்றி ஓபிஎஸ் உடன் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தங்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்று மீண்டும் கட்சியில் இணைந்த போதும் பிரிவுக்கு முந்தைய நிலையில் கழகப் பொறுப்புகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகள் மீண்டும் அப்பொறுப்புகளில் நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு அவ்வாறே கழகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
ஆனால் தற்போது மட்டும் தாங்கள் உறுதியளித்தபடி தங்களால் கட்சி பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்து வந்த பதவியை வழங்காமல் கட்சி நலனை கருத்தில் கொள்ளாமல் குறிப்பாக கடந்த 50 நாட்களாக அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் சாரை சாரையாக அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்ட அதிமுக என்னும் ஆலம் விருட்ச மரம், பொதுச்செயலாளராக இருந்து தங்கள் எடுத்த தவறான முடிவுகளால் 2021 சட்டமன்றத் தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு, கரைந்து கொண்டிருக்கிறது.
எனவே அதிமுக பொதுச்செயலாளராகிய நீங்கள் எங்களுக்கு உறுதி அளித்தபடி மீண்டும் தலைமை ஏற்று இணைந்த பின்பும் அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பதவிகளில் நியமிக்கப்படாமல் காலதாமதம் செய்ததோடு தங்கள் விருப்பப்படி பொறுப்புகளை நியமித்து 25.6.2026 அன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நாங்கள் யாவரும் தங்கள் வழங்கியுள்ள கட்சி பதவிகளை ஏற்று களப்பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்.
தாங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம் நாங்கள் என்றும் அதிமுக உறுப்பினர்களாக இருந்து செயல்படுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
