தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கு ஆதரவளித்த கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தும் வகையிலும் இந்தச் சிறப்புச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
அதே நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள், “நாங்கள் இந்த அரசுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு அளித்து வருகிறோம். எனவே, கூட்டணிக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை” என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்ததால், இக்கூட்டத்தில் இடதுசாரி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
