தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணிக்கு விரைவில் நல்ல பெயர் வைக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று மாலை கோவளத்தில் நடைபெற்றது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைய ஆதரவு தந்த தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ”
“தவெக தலைமையில் ஒரு புதிய, இயற்கையான கூட்டணி உருவாகியுள்ளது.
கடந்த 30, 40 ஆண்டுகளாகப் பணியாற்றியும் ஆட்சியில் பங்கேற்க முடியாமல் இருந்த பல கட்சிகள், தவெக-வின் கொள்கை உடன்பாட்டால் இன்று ஆட்சியில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. எங்களது தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவர், வைகோ, ஐயுஎம்எல் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சித் தலைவர்களும் இணைந்து ஆலோசித்து விரைவில் ஒரு நல்ல பெயரை அறிவிப்பார்கள்.
கூட்டணி தொடர்பாக இன்னும் அடுத்தடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டியுள்ளது.” என்றார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கட்சிக்குள்ளும் சில உட்கட்சி நடைமுறைகள் இருக்கும். எனவே, அவர்களுடனும் தொடர்ந்து சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, நல்லதொரு முடிவு எட்டப்படும்.
எங்களுடைய தலைவர் கட்சியின் முதல் மாநாட்டில் என்ன கொள்கைகளை அறிவித்தாரோ, யார் தங்களின் அரசியல் எதிரி என்று அழுத்திச் சொன்னாரோ, அதை இன்றுவரை மிக உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறார். எங்களோடு கொள்கை ரீதியாக ஒன்றிப்போகும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை” இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
