சென்னை கோவளத்தில் தவெக தோழமை கட்சிகளின் கூட்டம் இன்று (ஜூலை 1) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் மாநில தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி, ஜோதிமணி எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து தோழமை கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மணிக்கம் தாகூர், ”இது முதல் கூட்டம். பாசிட்டிவாக இருந்தது. தோழமை உணர்வுடன் நடந்தது. இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தோழமை கட்சிகளை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஒருங்கிணைப்பு குழு, குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் பெயர் சூட்டுதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்” என்று கூறினார்.
அவரிடம் இந்தியா கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு, ”இங்கு இருக்கிற எல்லா தலைவர்களும் இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் தான். எனவே நாடாளுமன்றத்தில தவெக நாடாளுமன்ற உறுப்பினர் எப்போது வருகிறாரோ, அன்றைக்கு உடனடியாக நாங்கள் இது பற்றி பேசுவோம்” என்றார்.
