அதிமுக, திமுக ஆட்சிகளில் ’ஏமாற்றப்பட்ட’ பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் புகார் கொடுங்க.. ஆதவ் அர்ஜூனா

Published On:

| By Mathi

Aadhav Arjuna Calls for Complaints from Cheated PWD Contractors

”கடந்த ஆட்சிகளில்” பணம் கொடுத்தும் ஏமாற்றப்பட்ட பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் புகார் கொடுக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) தெரிவித்துள்ளார்.

தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ஆனால், கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத்தொகை எனப் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களை அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறவுகள், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எனப் பலரிடமும் ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளனர். பலரிடம் பணத்தையும் பெற்றுக்கொண்டு முறையாக வேலைகளையும் ஒதுக்காமல், ஒப்பந்ததாரர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

ADVERTISEMENT

இது தொடர்பான பல புகார்கள் தற்போது எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) காவல்துறையினரிடமோ புகார் கொடுக்கலாம். என்னிடம் நேரடியாகவோ அல்லது minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும். விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share