– கபில் சிபல்
தமிழில் : ரவிக்குமார்
வெளியுறவு அமைச்சகம், இந்தியக் குடியரசு ஒருவருக்கு வழங்கும் கடவுச்சீட்டு (Passport) என்பது வெறும் பயண ஆவணமே தவிர, குடியுரிமைக்கான சான்று அல்ல என்று கூறுகிறது. அது பயண ஆவணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஆதார் அட்டையோ, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையோ (EPIC), அல்லது பிறப்புச் சான்றிதழோ—இவை அனைத்தும் சட்டப்பூர்வ அதிகார அமைப்புகளால் வழங்கப்பட்டிருந்தாலும்—அவற்றில் எதுவும்கூட அந்த நபரின் குடியுரிமைக்கான இறுதியான சான்றாகக் கருதப்பட முடியாது.
தெளிவாகச் சொன்னால், இந்திய அரசோ அல்லது சட்டப்பூர்வ அதிகார அமைப்போ வழங்கும் எந்த ஆவணமும் ஒரு நபரின் குடியுரிமைக்கான இறுதியான சான்றாகக் கருதப்பட முடியாது. இந்த விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன.

முதலாவதாக, ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது மட்டுமே அதில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு தானாகவே சான்றாகிவிடாது. அந்த உண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டால், அது நேரடியாகவோ அல்லது சூழ்நிலைச் சான்றுகள் மூலமோ, ஒரு சட்டப்பூர்வ அதிகார அமைப்பின் முன்பாக அல்லது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். இதுவே சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். ஆனால், சட்டத்தில் ஒரு முக்கியமான அனுமானம் (presumption) உள்ளது. அதாவது, இத்தகைய ஆவணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்கள் தவறானவை என நிரூபிக்கப்படும் வரை அவை உண்மையானவை என்றே கருதப்பட வேண்டும். அந்த விவரங்களின் நம்பகத்தன்மையை மறுக்கும் பொறுப்பு அதை கேள்விக்குட்படுத்துபவருக்கே உள்ளது. அவ்வாறு மறுக்கப்படாத வரை, அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் உண்மையானவையாகவே கருதப்படும்.

ஆனால், இந்தியக் குடியரசு வழங்கும் கடவுச்சீட்டுக்கு ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. ஒருவர் இந்தியக் குடிமகனாக இல்லாவிட்டால் அவருக்கு ஒருபோதும் கடவுச்சீட்டு வழங்கப்படாது. கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன் விரிவான விசாரணை நடைமுறை கட்டாயமாகப் பின்பற்றப்படுகிறது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்—குறிப்பாக விண்ணப்பதாரரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் போன்றவை—உண்மையானவையா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு வழங்கப்பட்ட பயண ஆவணம், பிற நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் உறுப்பு நாடுகளாலும் செல்லுபடியாகும் ஆவணமென்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த ஆவணமே, அதன் உரிமையாளர் இந்தியக் குடிமகன் என்பதைப் பிரதிபலிக்கிறது. அதனடிப்படையில்தான் பிற நாடுகளின் குடியேற்ற அதிகாரிகள் அவருக்கு அந்த நாடுகளில் நுழைய அனுமதி வழங்குகிறார்கள். உலகில் பல நாடுகள் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாமல்கூட நுழைவு அனுமதி வழங்குகின்றன. இந்தச் சலுகை, அந்த ஆவணம் வழங்கப்பட்ட நபர் இந்தியக் குடிமகன் என்ற சட்டப்பூர்வ அனுமானத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. எனவே, வெளியுறவு அமைச்சகம் கடவுச்சீட்டு வெறும் பயண ஆவணம் மட்டுமே என்று கூறுவது சட்டப் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளும் தந்திரமாகும் .

இத்தகைய சட்டப்பூர்வ அனுமானத்தை நிச்சயமாக மறுக்க முடியும். ஆனால் அதை மறுக்க முயல்பவர் மூன்றாவது நபராகவோ அல்லது அந்தக் கடவுச்சீட்டை வழங்கிய அதிகார அமைப்பாகவோ இருக்கலாம். அது அந்த நபரின் குடியுரிமையைப் பற்றிய புதிய உண்மைகள் கண்டறியப்பட்டதாலோ அல்லது வேறு பல காரணங்களாலோ இருக்கலாம். அத்தகைய சூழலில், அந்த நபர் உண்மையில் இந்தியக் குடிமகனா, அவர் செல்லுபடியாகத்தக்கக் கடவுச்சீட்டு வைத்திருக்கிறாரா அல்லது அந்தக் கடவுச்சீட்டை ரத்து செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கத் தேவையான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். அதன் பிறகே அந்த நபரின் சட்டப்பூர்வமான நிலையை ஒரு அதிகார அமைப்புத் தீர்மானிக்க முடியும். ஒருவர் இந்தியக் கடவுச்சீட்டை வைத்திருப்பதிலிருந்து எழும் சட்டப்பூர்வ அனுமானமானது, ஒரு இந்தியக் குடிமகன் இந்தியக் குடியரசில் அனுபவிக்கும் பல உரிமைகளின் சூழலிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் அரசமைப்புச் சட்டத்தின் பகுதி III-இல் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளும், பகுதி IV-இல் இடம்பெற்றுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளும் அடங்கும்.

அத்தகைய நபர், ஒன்றிய அரசும் அவர் வசிக்கும் மாநில அரசும் செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களையும் பெறத் தகுதியுடையவர். இதே நிலைப்பாடு, நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களின் கீழ் செயல்படும் பிற சட்டப்பூர்வ அதிகார அமைப்புகள் வழங்கும் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுக்கும் பொருந்தும்.
ஆதார் அட்டையையோ அல்லது கடவுச்சீட்டையோ வைத்திருக்கும் ஒருவர் இந்தியக் குடிமகன் அல்ல என்பதை விவாதத்தின் மையமாக்கக் கூடாது. உண்மையில், சட்டப்படி அது மறுக்கப்படும் வரை, அவர் இந்தியக் குடிமகனாகவே கருதப்பட வேண்டும்.
அடிப்படை உரிமைகள் தொடர்பான ஒரு விளக்கம்:
கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு அம்சம் இதில் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை. ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிட்டால், அவர் இந்தியக் குடிமகன் என்ற அந்தஸ்தை இழக்கிறார்; அதனுடன் அவரது இந்தியக் கடவுச்சீட்டும் உடனடியாக ரத்து செய்யப்படும். இது, கடவுச்சீட்டு என்பது வெறும் பயண ஆவணம் மட்டுமல்ல; அது குடியுரிமையின் சான்றும் கூட என்பதை நிரூபிக்கிறது.
நமது சட்டங்கள், ஒருவர் இந்தியக் குடிமகனாகக் கருதப்படுவதற்கான பல்வேறு வழிகளை அங்கீகரிக்கின்றன: பிறப்பு, வம்சாவளி, பதிவு, குடியுரிமை வழங்கல் (naturalisation), மற்றும் புதிய பிரதேசங்கள் நாட்டுடன் இணைக்கப்படுதல் ஆகியவை அவற்றில் அடங்கும். இவ்வாறான எந்த முறையின் மூலமாகவும் ஒருவர் குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்; அதன் விளைவாக அவருக்குக் கடவுச்சீட்டும் வழங்கப்படுகிறது.

அண்மையில் பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடைபெற்ற தேர்தல்களில், அதனுடன் தொடர்புடைய ஒரு வழக்கை விசாரித்தபோது, உச்சநீதிமன்றம் மிகப் பெரிய சட்டப்பிழையைச் செய்தது. சட்டப்படி குடியுரிமை மறுக்கப்படாத நிலையிலும், ஒரு வாக்குச்சாவடி நிலையிலான அலுவலர் (Booth Level Officer) ஒருவரின் குடியுரிமையைச் சந்தேகித்து அவரின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க அனுமதித்தது. இதன் மூலம் அந்த ஆவணங்களுடன் இணைந்திருந்த சட்டப்பூர்வ அனுமானத்தையே நீக்கிவிட்டது. இதன் விளைவாக, இலட்சக்கணக்கான மக்கள், அந்த சட்டப்பூர்வ அனுமானம் முறையாக மறுக்கப்படாமலேயே தங்களது வாக்குரிமையை இழந்தனர்.
இதன் காரணமாக, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒட்டுமொற்றத் தேர்தலும் முழுமையாகக் களங்கமடைந்துவிட்டது என்று நான் நம்புகிறேன்.
மறைமுகமாக ஆளும் கட்சிக்கு உதவக்கூடிய இத்தகைய நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளித்தது துயரமான ஒரு நிகழ்வு ஆகும். இது வெறும் சட்டப்பிழை மட்டுமல்ல; அரசியல் சமநிலையை மாற்றி, சமமற்ற அரசியல் போட்டி நிலையை உருவாக்கும் தவறும் ஆகும். இந்தியத் தலைமை நீதிபதி அண்மையில் நிகழ்த்திய உரையில், உண்மையான சமத்துவம் இல்லாதபோது சட்டம் வலிமைமிக்க தரப்புகளுக்கே அளவுக்கு மீறிய ஆதாயத்தை வழங்கும் என்று சரியாகவே குறிப்பிட்டார்.
வாக்களிக்கும் உரிமை ஒரு சட்டப்பூர்வ உரிமை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அந்த உரிமையைக் கோருவதற்கான அடிப்படையான ஆவணத்துடன் சட்டப்பூர்வ அனுமானமும் இணைந்திருந்தால், அந்த உரிமை மீறப்படுவது சமத்துவக் கோட்பாடு மீறப்படுவதாகும். சமத்துவம் என்பது ஒரு அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும்.
ஒரே வகையான சட்டப்பூர்வ ஆவணத்தை வைத்திருக்கும், அதே சட்டப்பூர்வ அனுமானத்திற்குத் தகுதியான ஒருவருக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட, அதே நிலையில் உள்ள மற்றொருவருக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது—அந்த சட்டப்பூர்வ அனுமானம் முறையாக மறுக்கப்படாத நிலையில்—அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்தத் தேவையற்ற சர்ச்சை, ஆளும் அரசு அயோத்தியிலுள்ள ராமர் கோயில் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் முதல் ஒரு முதலமைச்சரின் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தல் குற்றச்சாட்டுகள் வரையிலான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் அவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகத் திட்டமிட்டு எழுப்பப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன்.
இந்தியாவின் எதிர்காலமே கேள்விக் குறியாகி உள்ளது. எதிர்வரும் நாட்களில் உச்சநீதிமன்றம் இதை உணர்ந்துகொள்ளும் என்று நான் நம்புகிறேன்.

(கபில் சிபல் : மூத்த வழக்கறிஞர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர். தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் 01.07.2026 அன்று வெளியான அவரது கட்டுரையின் தமிழாக்கம் இது )
