2026 தமிழக சட்டபேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில், ” மாண்புமிகு பொதுச் செயலாளர் அவர்களுக்கு, G. ராஜசேகரன் ஆகிய நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் கழக பொருளாளராகவும், 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றவன்.
இந்த மகத்தான பொறுப்புகளை எனக்கு வழங்கி, மக்கள் பணியாற்றும் வாய்ப்பை அளித்த தங்களுக்கும், கழகத்தின் மூத்த நிர்வாகிகள், சக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ரத்தத்தின் ரத்தங்களான அன்புத் தொண்டர்கள் மற்றும் எனது அரசியல் பயணத்தில் துணைநின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் என்னால் இயன்ற அளவில் முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றி வந்துள்ளேன். கழகம் வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் என் கடமையாகக் கருதி, மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டேன். இருப்பினும், அரசியல் கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள், மக்கள் நலன் குறித்த எனது பார்வை, எதிர்கால பொதுவாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தி ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு கனத்த இதயத்துடனும் கலங்கிய மனத்துடனும் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சி தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த மகத்தான இயக்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் கழக பொருளாளர் பொறுப்பு உள்ளிட்ட கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இன்றைய தினம் முதல் விலகுகின்றேன்.”என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் கட்சியில் இருந்து விலகி உள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
