தேனி வளர்ப்புப் பயிற்சியின் போது கதண்டுகள் கடித்ததில் விவசாயக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் செயல்பட்டு வரும் ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் சுரேஷ். கடலூர் மாவட்டம், பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர். இவர், உதவிப் பேராசிரியர் ஸ்ரீதேவிகா மற்றும் 18 மாணவர்களுடன் புதன்கிழமை அன்று தேனி வளர்ப்புப் பயிற்சிக்காகப் பண்ருட்டி அருகே அண்ணாகிராமம் பகண்டை பாப்புக்குளம் பகுதியில் உள்ள செல்வக்குமார் என்பவருக்குச் சொந்தமான தேனி வளர்ப்புப் பண்ணைக்குச் சென்றிருந்தார்.
அங்குப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கூட்டமாகப் பறந்து வந்த கதண்டுகள் அங்கிருந்தவர்களைக் கொடூரமாகக் கடித்தன. இதனால் பண்ணை உரிமையாளர் செல்வக்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும், பேராசிரியர் சுரேஷைக் கதண்டுகள் கடுமையாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டுப் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த உதவிப் பேராசிரியர் ஸ்ரீதேவிகா மற்றும் மாணவர்கள் 10 பேர் பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்பொழுது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, உயிரிழந்த பேராசிரியரின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதில் உதவிப் பேராசிரியர் சுரேஷ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷின் குடும்பத்தாருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த மாணவ, மாணவிகளை அப்பகுதி விவசாயிகள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும், உயிரிழந்த உதவிப் பேராசிரியர் சுரேஷின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என தெரித்துள்ளார்.
