தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நடந்த சதி வழக்கில் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

இந்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள்: 30.06.2026 ஆம் தேதி 19.00 மணிக்கு டி1 திருவல்லிக்கேணி காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.ரஜினிஷ் ஆகிய நான் நிலைய அலுவலகத்தில் இருந்தபோது, காவல் கூடுதல் ஆணையர் அவர்கள் சட்டம் (ம) ஒழுங்கு தெற்கு பிரிவு அலுவலக நடப்புத்தாள் C.No 480/Addl.CoP/L&O(S)/CV/2026 நாள் 29.06.2026 மற்றும் திருவல்லிக்கேணி சரக காவல் உதவி ஆணையர் அலுவலக நடப்புத்தாள் Rc.No.32/ACT/Camp/2026 நாள் 29.06.2026 ஆகிய நடப்புத்தாள் மூலம் வழிவழியாகப் பெறப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Dr.N. இளையராஜா என்பவர் கொடுத்த புகாரின் விவரம் பின்வருமாறு:
தவெக எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த புகார்
நான் BDS பட்டப்படிப்பு படித்த பல் மருத்துவர் . நான் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக தனித் தொகுதியான ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 70,201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன்.
எங்கள் த.வெ.க 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்து நல்ல முறையில் ஆட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 26.06.2026 அன்று 9047777775 நம்பரில் இருந்து எனக்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு அவர் பெயர் திருநாவுக்கரசு என்றும் IPDS என்றும் பெயரில் சென்னையில் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னிடம் பேசினார்.
அவர் பேசுகையில் ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான் நான் கால் பண்ணினேன், உங்களை எனக்கு நல்லா தெரியும். ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்த நபர்கள் சொன்னதன் பேரில் நான் தங்களிடம் தொடர்பு கொள்கிறேன் எனக் கூறினார்.
மேலும் நான் பெங்களூரு போகும்போது உங்களை நான் வீட்டில் வந்து சந்திக்கலாமா என்று கேட்டார்.
அதற்கு நான் பிஸியாக இருப்பதாகவும் எதுவாக இருந்தாலும் போன்லயே சொல்லுங்க என்று சொன்னேன்.
அப்போது அவர் தொடர்ந்து என்னிடம் வீட்டுக்கு வரட்டுமா என்று கேட்டபோது நான் பிஸியாக இருந்ததால் அவரது அழைப்பைத் துண்டித்து விட்டேன்.
பின்பு அவர் பலமுறை எனக்கு WhatsApp கால் மூலம் அழைத்தார், நான் எடுக்கவில்லை. பின்பு அன்று இரவு சுமார் 10:20 மணிக்கு அவர் மீண்டும் WhatsApp கால் செய்த போது நான் எடுத்துப் பேசினேன்.
அப்போது அவர் நீங்கள் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்க, ஆனா இந்த அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியாது, நான் சொல்லுவது போல் நடந்து கொண்டால் உங்களுக்கும் லாபம் எனக்கும் லாபம், ஏற்கனவே ஒரு ரிப்போர்ட்டர் உங்களிடம் இது தொடர்பாக பேச முயற்சித்தபோது நீங்கள் பிடி கொடுக்காமல் நகர்ந்து விட்டீர்கள் என்ற கேள்விப்பட்டேன், அதனால்தான் இப்போதே நானே பேசுகிறேன், என்று கூறினார்.
அதற்கு நான், ”இதில் எல்லாம் உடன்பாடு இல்லை” எனக் கூறினேன். உடனே அவர் 35 கோடி வரை தருவார்கள், நீங்கள் ராஜினாமா எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஒரு MLA-வாக உங்கள் கட்சியின் கொறடா உத்தரவின் பேரில் சபாநாயகர் குறித்த தீர்மானத்திற்கு நீங்கள் ஓட்டு போடணும்னு இருக்கு உங்கள் கடமையா இருந்தாலும், நீங்க அதைச் செய்யக்கூடாது, சபாநாயகர் மீதான தீர்மானத்தின் போது நாங்கள் சொல்வது போல நீங்கள் நடந்து கொண்டால் போதும் உங்களுக்கு 35 கோடி தந்துவிடுவோம், நீங்கள் ஓகே சொன்னால் உங்களை அந்த முக்கிய கட்சியின் சார்பாக நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக் உங்களை வந்து பார்ப்பார்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும்; எல்லா டீலிங்கும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறினார்.
எனக்கு விருப்பமில்லை இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று நான் கூறினேன். அதற்கு அவர் 35 கோடி தரேன், நீங்க கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்க உங்களால எல்லாம் இவ்வளவு பெரிய amount-ஆ நினைச்சுக் கூட பார்க்க முடியாது, இந்த ஆப்ஷனும் உங்களுக்கு கிடைக்காது என்று கூறினார்.
நான், ”இல்லை, இனிமேல் என்னை இக்காரணத்திற்காக அழைக்காதீர்கள்| என்று கூறினேன்.
அதற்கு அவர் ”இந்த அரசு ரொம்ப நாள் நீடிக்கப் போறதில்லை, என்றைக்கு இருந்தாலும் எங்கள் தயவில் தான் நீங்கள் இருக்க வேண்டும், நான் சொல்வது போல் நடந்தால் தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது, இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும், நான் பேசியதை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, சொன்னால் நீங்கள் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உயிருடன் இருக்க மாட்டீர்கள்” என்று மிரட்டி விட்டு போனை வைத்து விட்டார்.
அவர் சொன்ன விதம் எனக்கு பயத்தை கொடுத்தது. எனக்கும் என் குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களின் இந்த த.வெ.க ஆட்சியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு சதித்திட்டம் தீட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான என்னை எனது பணியைச் செய்யக்கூடாது என்பதற்காக லஞ்சம் கொடுக்க முயற்சித்தது எனக்கு கொலை மிரட்டல் விடுத்து சதி விரோதச் செயல்களில் ஈடுபட்டு மேற்படி நபர்கள் மீதும் அவர்களைப் பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும் உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டு இப்புகார் மனுவை அளிக்கிறேன். இத்துடன் மேற்படி நபர் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசிய WhatsApp calls-ற்கான Call history Screenshot (1 பக்கம்)-யும் இத்துடன் இணைக்கிறேன். இவ்வாறு இளையராஜா எம்.எல்.ஏ. புகார் தெரிவித்திருந்தார்.
காவல்துறை நடவடிக்கை:
இந்த புகார் மனுவினைப் பெற்று திருவல்லிக்கேணி மாவட்ட காவல் துணை ஆணையர் உத்தரவுப்படி 29.06.2026 ஆம் தேதி 12.00 மணி முதல் 30.06.2026 ஆம் தேதி 16.00 மணி வரை முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின் முடிவின் அடிப்படையில் இப்புகாரின் மீது குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள போதுமான முகாந்திரம் இருந்ததால் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் 30.06.2026 க்கு 19.00 மணிக்கு டி1 திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்ற எண் 205/2026; ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகள் 8 மற்றும் 12, BNS சட்டப்பிரிவுகள் 61(2) (A) மற்றும் 351(3) படி வழக்கு பதிவு செய்து மேல் விசாரணைக்காக வழக்கு கோப்பினை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி சரகம் அவர்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இதன் அசல் மற்றும் புகார் மனுவை இணைத்து கணம் 2 வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர், எழும்பூர் சென்னை-08 அவர்களுக்கும் இதர நகல்களை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை (FIR எஃப்.ஐ.ஆர்) -ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
