தவெகவில் விஜயபாஸ்கர் உட்பட 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஐக்கியம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

vijayabaskar

தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பாக, அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் முறைப்படி இணைந்தனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இதற்கான பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குத் தவெக துண்டு அணிவித்து முறைப்படி வரவேற்றார்.

ADVERTISEMENT

அதிமுகவிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்த திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ மான்ராஜ் உள்ளிட்டோர் இன்று தவெக-வில் இணைந்தனர். இவர்களோடு கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 200 பஸ்கள், 600 கார்கள் மூலமாக வந்திருந்த ஆயிரக்கணக்கான முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுகவில் இருந்து தொடரும் சரிவு

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் தவெக-விற்குத் தாவி வருகின்றனர். ஏற்கனவே தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத் ஆகிய மூவரும் தவெக-வில் ஐக்கியமாகினர். அந்த வரிசையில், தற்போது தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த அதிரடி மாஜிக்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இன்று அதிகாரப்பூர்வமாகத் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share