”முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதால்தான் தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிவருவதாக” சிபிஎம் கட்சியின் (CPM) தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவையில் இன்று ஜூலை 2-ந் தேதி செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: மக்கள் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அளித்திருக்கிற தீர்ப்பை ஏற்க மறுத்துத்தான் இது போன்ற குதிரை பேரம், கழுதை பேரம் போன்றவற்றிலெல்லாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக, ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்க முடியவில்லை. ஆகவே எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும், தாங்கள் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்கின்ற முறையில்தான் இத்தகைய முயற்சிகள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள், அடுத்து விரைவாகத் தேர்தல் வரும், விரைவாக ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்லி இருந்தார். அவர் பேசியதனுடைய பின்னணி என்ன என்பது இப்போதுதான் தெரிகிறது. அதற்கான ஒரு தீவிரமான முயற்சிகளில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதனுடைய வெளிப்பாடுதான் இந்த சட்டமன்ற உறுப்பினரை கோடிக்கணக்கில் விலை பேசியிருக்கிற செய்தி இன்றைக்கு வந்திருப்பதும், முறையான வழக்கு பதிவு செய்து அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட நபர்கள் எல்லாம் இன்றைக்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தானாக விரும்பி ஒரு கட்சியில் சேர்வது, இன்னொரு கட்சியில் மாறுவது என்பதெல்லாம் தமிழ்நாட்டில் சகஜமான விஷயம். இடதுசாரிகளைத் தவிர மற்ற கட்சிகள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு போவது என்பதெல்லாம் நிறைய நடைபெற்றிருக்கிறது தமிழ்நாட்டில்.
அந்த முறையில் விரும்பி கட்சி மாறுவது, விரும்பி கட்சியில் சேர்வது என்பது வேறு. ஆனால் இது போன்ற கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி ஒருவரை வாங்குவது என்பதெல்லாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். ஆகவே அதிலே யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து சட்டப்படியான தண்டனையைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்த விரும்புகிறேன்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்
ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்த போதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எங்களுடைய கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறோம். இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல். இது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியது மட்டுமல்ல, தவெக தலைமையிடமும் அத்தகைய கருத்துக்களை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். அப்போது எங்களிடம் அவர்கள் சொன்ன விளக்கம் என்பது அவர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்துவிட்டு வருகிறார்கள். அவர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்வதை நாங்கள் எப்படி தடுக்க முடியும் என்கின்ற முறையில் அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் சொல்லப்பட்டது. அப்போதைக்கு சரி, அவங்க விரும்பி ராஜினாமா பண்ணாங்கன்னா நீங்க ஏன் அங்க கட்சியில் சேர்த்துக்கிறீங்க? என்கிற அதிருப்தியை தவெக தலைமையிடம் தெரிவித்திருக்கிறோம். இப்போதும் அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.
