அதிமுகவில் இருந்து விலகலா? – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

அதிமுகவில் உண்மையாக உழைத்தவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படவில்லை என்றும், அதனால் தங்களுக்குப் பதவிகள் வேண்டாம் எனத் தொண்டர்களாகத் தொடர முடிவெடுத்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், “நாங்கள் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அனைத்தையும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் முதற்கொண்டு அந்தந்த மாவட்டங்களில் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்காகக் களத்தில் நின்று உழைத்தவர்கள் ஆகியோருக்குக் கட்சியில் தகுந்த பதவிகள் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இதனால், நான் மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அனைவரும் எங்களுக்கு எந்தப் பதவியும் வேண்டாம், சாதாரணத் தொண்டராகவே தொடர்கிறோம் என்று கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அதேநேரம், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக நாங்கள் தொடர்ந்து நீடிப்போம்.

கூட்டத்திற்கு அழைக்காதது ஏன்?

அதிமுக மகளிர் அணி கூட்டத்திற்கு வளர்மதி எப்போதுமே எங்களை அழைப்பார். ஆனால் நேற்றைய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு முன்னரே நாங்கள் பதவி வேண்டாம் என கடிதம் கொடுத்துவிட்டதால், அவர்கள் எங்களை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

ADVERTISEMENT

நான் ‘ஜாம்பவான்கள்’ என்று குறிப்பிட்டதற்கு அர்த்தம் வேறு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து கட்சியை வளர்த்தவர்கள், எடப்பாடியாருக்காகக் களத்தில் நின்று உழைத்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். கடந்த 4ஆம் தேதி புதிய பதவிகள் அறிவிக்கப்படும் போது தகுதியானவர்களுக்குப் பதவிகள் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம், ஆனால் கொடுக்கவில்லை. அது ஏன் என்பது குறித்து அவரிடமே (ஈபிஎஸ்) பதில் கேளுங்கள்.

எங்களைப் பொறுத்தவரை கடிதத்தில் எல்லாவற்றையும் ஓப்பனாகச் சொல்லிவிட்டோம். இந்த இயக்கம் இன்னும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்துப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்” என்று எஸ்பி. வேலுமணி தெரிவித்தார்.

ADVERTISEMENT

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் தவெகவில் இணைந்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இந்த அதிருப்திப் பேச்சு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share