அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெகவில் இன்று இணைந்தனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.
இந்த இணைப்பு விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், “அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருக்கக்கூடியவரை நாங்களெல்லாம் சேர்ந்துதான் பொதுச் செயலாளராக உருவாக்கினோம். ஆனால், அவருடைய தவறான முடிவுகளால் இன்று இந்த இயக்கம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுதான் மிகப்பெரிய உதாரணம். உண்மையை எடுத்துச் சொன்னால் துரோகி என்று சொல்லுகிறார். யார் துரோகி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
“திராவிட முன்னேற்றக் கழகத்தோடு சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று சொல்வது சரியா?” என்று, இந்த இயக்கத்திலிருந்து விலகி இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு தொண்டனும் நினைத்துப் பார்த்துதான், இன்று புரட்சித் தளபதி விஜய் அவர்களின் தலைமையில் இங்கே இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வருகின்றார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாற்பத்திரண்டு ஆண்டுகள் இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருந்து, இருபத்தைந்து ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்தவன் நான். பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளில் இருந்து, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, ஐந்து ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி கொடுத்து அழகு பார்க்கப்பட்டவன்.
கரூர் சட்டமன்றத் தொகுதி என்று சொன்னாலே உங்களுக்கு நன்றாகத் தெரியும். அது தமிழக வெற்றிக் கழகத்துடைய வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளியாக இருந்தது கரூர் சம்பவம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்; தளபதி விஜய் கரூர் வருகையின்போது நாற்பத்தொரு அப்பாவி உயிர்கள் இறந்தது. அதுமட்டுமல்ல, கரூர் சட்டமன்றத் தொகுதி என்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய அரசியல் விமர்சகர்களும், அரசியல் பார்வையாளர்களும் உற்று நோக்கக்கூடிய ஒரு தொகுதியாக இருந்தது.
ஏன் என்று சொன்னால், அந்தத் தொகுதியில் அதிகாரத்தினுடைய உச்சத்தில் பல்வேறு பொய் வழக்குகளையும், பணத்திமிரையும் வைத்து, ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், மிகப்பெரிய போராட்டத்திற்கு இடையில் நாம் வெற்றி பெற்றோம். இருந்தாலும், வெற்றி பெற்ற பிறகு சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, இன்று புரட்சித் தளபதியின் தலைமையில் இந்த இயக்கத்தில் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அத்தனை பேரும் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், இன்று அரசியலினுடைய நிலை என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.
ஒரு தலைவன் சரியான முடிவு எடுக்காமல் இருந்தால் அந்த இயக்கம் எப்படிப் போகும் என்பதற்கு உதாரணம்தான் இந்த நிலை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்ட மிகப்பெரிய இயக்கம்.. ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அடிமட்டத் தொண்டனுடைய உணர்வைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் பல மேடைகளில் பேசும்போது சொல்வேன், கீழே இருக்கக்கூடிய தொண்டன் கொடி பிடித்தால்தான் அந்த இயக்கத்தினுடைய தலைவன் கோட்டையில் கொடியேற்ற முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்பேர்ப்பட்ட மாபெரும் இயக்கம், இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தோடு சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள், உண்மையை எடுத்துச் சொன்னால் துரோகி என்று சொல்கிறார்கள். எனவே, இன்று தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் நம்முடைய புரட்சித் தளபதி, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இப்போது மட்டுமல்ல, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இருக்கும் வரை பதினொரு ஆண்டுகள் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். அதேபோல, இனிமேல் தமிழகத்தில் வெற்றிக் கழகத்தினுடைய ஆட்சி, புரட்சித் தளபதி விஜய் அவர்களின் ஆட்சிதான் தொடரும் என்று சொல்லி, இந்த இணைப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கக்கூடிய அனைவருக்கும், புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மற்றும் கரூர் விஜயபாஸ்கர் ஆகிய நாங்கள் இருவரும் — மற்றும் மற்ற மாவட்டங்களைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, நம்முடைய முதலமைச்சர் புரட்சித் தளபதி அவர்கள் சமீபத்தில் ஒரு வார காலத்தில் கரூர் வர இருக்கிறார். அந்தக் கரூர் நிகழ்ச்சியில் இன்னும் அலைகடலாக இருக்கக்கூடிய தொண்டர்களையும் இதில் இணைத்து, இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்காக உண்மையாக உழைப்போம்” என்றார்.
