கிண்டி ஹோட்டலில் சதித்திட்டம் – காவல்துறை : எந்த ஆதாரமும் இல்லை – செந்தில் பாலாஜி : நீதிமன்றத்தில் பரபர வாதம்!

Published On:

| By Kavi

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கியுள்ளது. 

தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா, இந்த ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் 35 கோடி பேரம் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதாவது, சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதாகவும், அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் கூறும் வகையில் செயல்பட்டால் 35 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று பேரம் பேசியதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இதில் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜா ஆகிய மூன்று பேருக்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

செந்தில் பாலாஜி மனு!

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் சேர்க்கப்பட்டனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர்கள் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

ADVERTISEMENT

செந்தில் பாலாஜி தனது மனுவில், ‘குதிரை பேரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. விரைவில் கரூரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம் என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். எனவே கரூர் பெருந்துயர வழக்கில் தன்னை தொடர்புபடுத்தவே வலுக்கட்டாயமாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளேன். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது முன் ஜாமின் மனுக்கள் இன்று (ஜூலை 8) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

இடைத்தேர்தலில் பணியாற்றுவதை தடுக்க வழக்கு

அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “தொலைபேசி அழைப்பு வந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பில் பேசப்பட்டதற்கான ஆடியோ பதிவு எதுவும் இல்லை. சிடிஆர் (போன் கால் வந்ததற்கான பட்டியல் விவரம்) மட்டுமே ஆதாரமாக உள்ளது.

சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் ஆட்சி கவிழாது. சபாநாயகருக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவளித்தனர். 

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு ஈரோட்டில் இருந்த நாளில் அசோக்குமாரும் இருந்தார் என்பதை தவிர வேறு எதுவும் ஆதாரமாக இல்லை. இருவரும் சந்தித்துக் கொண்டார்களா இல்லையா என்ற விவரத்தை வழக்கில் சொல்லவில்லை. 

கரூரில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிக்காக பணியாற்றுவதை தடுக்க வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த பணமும் வழங்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதியாக உள்ள செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார்” என்று வாதம் முன் வைத்தார். 

செந்தில் பாலாஜி தம்பி என்பதாலேயே…

அசோக் குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமரேசன், ‘செந்தில் பாலாஜியின் சகோதரர் என்பதால் மட்டுமே இந்த வழக்கில் அசோக்குமார் சிக்க வைக்கப்படுகிறார். எப்போதெல்லாம் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறதோ அந்த வழக்குகளில் அசோக்குமாரையும் சேர்த்து விடுகின்றனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க கோர முடியாது. தமிழக வெற்றி கழகத்திற்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவுக்கு 59 எம்எல்ஏக்களும் அதிமுகவுக்கு 41 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆளும் கட்சிக்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் ஆகியோர் ஆதரவாக உள்ளனர். இந்த சூழலில் 59 எம்எல்ஏக்களை கொண்ட திமுக எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும். 35 கோடி ரூபாய் குதிரை பேரம் என்பது யூகம்தான். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது” என்று குறிப்பிட்டார். 

சிங்கப்பூருக்கு தப்பி சென்ற நபர்…

காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சென்னையில் அறைகளை புக் செய்து சதி திட்டம் தீட்டியதை காட்டுவதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. புலன் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜூன் 25, 26, 27 ஆம் தேதிகளில் கிண்டி தனியார் ஓட்டலில் சந்தித்து பேசியது தெரியவந்துள்ளது. 

அசோக் குமார் பெயர் எஃப்ஐஆர்-ல் உள்ளது. இந்த விவகாரத்தில் அசோக்குமாருக்கு தொடர்பு உள்ளதற்கு ஆரம்ப கட்ட ஆதாரங்கள் உள்ளன. ஹவாலா பணம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது. 

இந்த வழக்கு, புதிய அரசை அமைப்பதற்கான முயற்சி பற்றியது அல்ல. மாறாக ஒரு அரசாங்கம் மிக முக்கியமான கட்டத்தில் இருந்தபோது ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தது பற்றியதாகும்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அவர் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை அங்கிருந்தவாறே டெலிட் செய்துவிட்டார். அதை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்த விசாரணை பெங்களூரு வரை விரிவடைந்துள்ளது.அங்கு இன்னும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும். எனவே இருவருக்கும் முன் ஜாமின் வழங்கக் கூடாது” என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

முன் ஜாமின் வழங்கி உத்தரவு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், ”குதிரை பேரவழக்கில் செந்தில் பாலாஜி அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கினார். தினமும் காலை மாலை காவல்துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share