கரூர் பெருந்துயிர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், இதை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 10ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் விஜய் கரூர் செல்கிறார். கடந்த 2025 செப்டம்பர் 27ல், பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், கரூரில் இருந்து சென்னை திரும்பிய விஜய், தற்போது முதலமைச்சராக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூர் செல்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கும், அவர்களுக்கு அரசு வேலைக்கான அரசாணைகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் அதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் தீரன் திருமுருகன், நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் முறையீடு செய்தார்.
அப்போது மனுதாரர் சார்பில், ”கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த பெருந்துயரம் தொடர்பாக சிபிஐயும் விசாரித்து வருகிறது. இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல.
இது போன்ற அசம்பாவிதங்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கை முடிவுகள் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறான கொள்கை முடிவுகள் ஏதுமின்றி இப்படி வேலைவாய்ப்பு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது
இந்த முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறி அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர். மேலும் ஒரு மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில், அது பட்டியலிடப்பட்டு வழக்கம் போல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறினர்.
முன்னதாக உச்ச நீதிமன்றமும் திமுக சார்பில் வைக்கப்பட்ட இதே கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
