“ஒரு அக்கா ஸ்தானத்தில் தான்..” – அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக ராஜ்மோகன் விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister Keerthana

அரசுப் பள்ளி மாணவியிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “ஒரு அக்கா ஸ்தானத்தில் இருந்துதான் அமைச்சர் அந்த மாணவியிடம் பேசினார்; யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் ஆய்வு நடத்திய வீடியோ வெளியானது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அதற்குப் பதிலளித்த அவர், “அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தத்தமது தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வது என்பது காலங்காலமாகத் தொடரும் ஒரு மரபுதான். இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. சம்பந்தப்பட்ட அந்த நிகழ்வின்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். அங்கிருந்தபடியே இதுகுறித்து விசாரித்தேன். உண்மையில், அமைச்சர் தரப்பில் இருந்து எந்தவொரு காணொளியோ அல்லது கேட்பொலியோ (Audio) பதிவு செய்யப்படவில்லை. அங்கு வந்திருந்த பிற ஊடகங்கள் எடுத்த காணொளிகள்தான் சமூக வலைத்தளங்களில் பரவி, பின்னர் சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளன. மற்றபடி இந்த ஆய்வுகள் என்பது வழக்கமான ஒன்றுதான், அதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

அமைச்சராக இருக்கும் கீர்த்தனா அவர்களும் ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்தவர்தான். ஒரு மாற்றுத்திறனாளியின் மகளாகப் பிறந்து, தமிழ்வழிக் கல்வியில் படித்து, இன்று ஆங்கிலத்திலும் சிறப்பாகப் பேசக்கூடிய தனித்திறமையை வளர்த்துக்கொண்டு அரசியல் ஆளுமையாக உயர்ந்தவர்” என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, தந்தையின் தொழில் குறித்துக் கேட்டதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, “பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தமிழ்வழிக் கல்வி குறித்தோ, ஆங்கிலப் புலமை குறித்தோ அல்லது அவர்களது பின்னணி குறித்தோ அரசியல் காரணங்களுக்காக யாரும் தவறான நோக்கத்தில் கேள்வி எழுப்பக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் அந்த மாணவியுடன் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கவும் (Ice breaker), அவரோடு நெருங்கிப் பழகவுமே அமைச்சர் முயன்றார். அமைச்சரும் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால், அந்த அரசுப் பள்ளி மாணவியைப் பார்த்தபோது தனக்கு நிகரான ஒருத்தியாகவே கருதினார். ஒரு அக்கா ஸ்தானத்தில் இருந்துதான் அந்த மாணவியிடம் பேசினார். எனவே, இதனை யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share