தமிழக வெற்றி கழக கூட்டணி தொடர்பாக திருமாவளவன் பேசியிருந்த நிலையில், “வார்த்தை விளையாட்டு வேண்டாம்” என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்குக் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதில் சிபிஎம், சிபிஐ தவிர மற்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.
இந்த சூழலில் தவெக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாகச் சமீபத்தில் தோழமைக் கட்சிகள் கூடி ஆலோசனை செய்தன.
இந்த சூழலில் கூட்டணி தொடர்பாக பேசிய திருமாவளவன், ”நாங்கள் தமிழகக் வெற்றி கழக கூட்டணியில் இணைந்து விட்டோம் என்று சொல்வதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. திமுக கூட்டணியில் இருப்பதாகவே உணர்கிறோம். கடந்த ஜூலை 1ம் தேதி கூட்டணி தொடர்பாக முதலமைச்சர் தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதன் பொருள் தமிழக வெற்றி கழக தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஒரு கூட்டணி அமையவில்லை என்பதுதான்” என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 7) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், ”தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைய ஆதரவு கொடுத்தது ஆதரவு நிலை. அமைச்சரவையில் இடம்பெற்றது தோழமை நிலை. அடுத்த நிலை கூட்டணி அமைக்கும் நிலை, பெயர் சூட்டுவதற்கான நிலை.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு நிலையோடு இருக்கிறார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம்.
ஆட்சியில் பங்கு கொடுத்து முதல்வர் விஜய் தோழமையை உருவாக்கியுள்ளார். மூன்று கட்சிகளிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். கூட்டணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு எடுப்போம். அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஒரு அங்கம்தான். வார்த்தை விளையாட்டு விளையாட இது விஜய் டிவியோ சன் டிவியோ நடத்தும் போட்டி நிகழ்ச்சி அல்ல.
அண்ணன் திருமாவளவன் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் கொண்ட கொள்கை மிகவும் உறுதியானது. பாஜக, ஆர் எஸ் எஸ் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிராக எந்த ஒரு சலனமும் இல்லாமல் உறுதியாகப் போராடக் கூடியவர். அவரது கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர்தான் கூற வேண்டும். நான் காங்கிரஸ் கட்சியின் நிலையை மட்டுமே கூற முடியும்” என்று கூறினார்.
