முதல்வர் கரூர் செல்வதைக் கண்டு திமுக பயப்படுவது ஏன்? – நிர்மல் குமார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister Nirmal Kumar Press Meet

முதலமைச்சர் கரூர் செல்வதைக் கண்டு திமுகவினர் தேவையற்ற அச்சம் அடைகின்றனர் என அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 7) தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “முதலமைச்சர் விஜய் கரூர் செல்லத் தடை விதிக்கக் கோரிய மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது” குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “எல்லாருக்கும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், முதலமைச்சர் கரூருக்குச் செல்வதால் திமுகவினருக்கு ஏன் இவ்வளவு பயம் வருகிறது? ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும், எந்த இடத்திற்கும் செல்வதற்கு நூறு விழுக்காடு உரிமை உள்ளது. ஆனால், முதலமைச்சர் கரூருக்குச் செல்வதைக் கண்டு திமுகவினர் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? அப்படி முதலமைச்சர் சென்றால், அங்குள்ள மக்கள் என்னென்ன உண்மைகளைச் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சமே இதற்கு முக்கியக் காரணம்” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “இதனைத் தடுப்பதற்காக எந்த அடிப்படை விவரமும் இல்லாமல் திமுகவின் சட்டக் குழு உச்சநீதிமன்றம் வரை சென்று மனுத்தாக்கல் செய்து அனைவரின் நேரத்தையும் வீணடிக்கிறது. ‘வழக்கை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே திமுக தரப்புக்கு அறிவுறுத்தும் அளவுக்குத்தான் அவர்களின் மனுக்கள் இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுக்கு ஏதாவது செய்தீர்களா? கடந்த 70 ஆண்டுகளாக நீங்கள் செய்த அனைத்துத் துரோகங்களுக்கும் மக்கள் விடை கொடுத்துவிட்டனர். இன்னும் எத்தனை முறை நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிக்கப் போகிறீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “சம்மன் அனுப்பப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது? குற்றத்தில் ஈடுபாடு இருப்பதால் மட்டுமே அவர்கள் சம்மனை எதிர்கொள்ளாமல் ஓடி ஒளிகின்றனர். கடந்த காலங்களில் தங்களுக்கு டெல்லியில் சிபிஐ சம்மன் அனுப்பியபோது, தாங்கள் நேரில் சென்று ஆஜராகி விளக்கம் அளித்ததை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன். செந்தில் பாலாஜி தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நினைத்துக்கொள்ளக் கூடாது. காவல்துறை தனது கடமையைச் சரியாகச் செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share